டொனால்டு ட்ரம்பின் வெற்றிக்கு எலோன் மஸ்க் செலவிட்டுள்ள தொகை... மிரள வைக்கும் கணக்கு
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் வெற்றிபெற உதவுவதற்காக எலோன் மஸ்க் கால் பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்டதாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்க வரலாற்றில்
டெஸ்லா மற்றும் SpaceX நிறுவனரான எலோன் மஸ்க், டொனால்டு ட்ரம்பின் தேர்தல் பரப்புரை தொடர்பிலான ஆதரவு குழுக்களுக்கு மொத்தம் 259 மில்லியன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ 2.192 கோடி செலவிட்டுள்ளார் என்றே தெரிய வந்துள்ளது.
அமெரிக்க வரலாற்றில் ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஒருவர் அளிக்கும் மிகப்பெரிய நன்கொடை இதுவென்றே கூறப்படுகிறது. இதனால், டொனால்டு ட்ரம்பின் மிக நெருக்கமான, அரசியல் செல்வாக்குமிக்க நபராகவும் எலோன் மஸ்க் மாறியுள்ளார்.
அத்துடன் பொறுப்பேற்கவிருக்கும் ட்ரம்ப் நிர்வாகத்தின் செயல் திட்டங்களை வடிவமைக்கும் முக்கிய பங்கையும் எலோன் மஸ்க் கைப்பற்றியுள்ளார். டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக, தேர்தல் களத்தில் தீவிரமாக பணியாற்றும் பொருட்டு PAC என்ற அமைப்பை எலோன் மஸ்க் உருவாக்கினார்.
வேலையில் இருந்து நீக்கும்
இந்த அமைப்புக்கு 239 மில்லியன் டொலர் நன்கொடை அளித்தார். அக்டோபர் மாதம் இறுதியில் மீண்டும் 20 மில்லியன் டொலர் நன்கொடை அளித்துள்ளார். எலோன் மஸ்க் உருவாக்கிய இந்த அமைப்பானது தேசிய கருக்கலைப்பு தடை சட்டத்தில் ட்ரம்ப் கையெழுத்திட மாட்டார் என்று வாக்காளர்களை நம்ப வைக்க தீவிரமாக செயல்பட்டது.
மேலும், டொனால்டு ட்ரம்பின் ஆலோசகர் குழுவிலும் எலோன் மஸ்க் இடம் பிடித்தார். அத்துடன் அரசாங்கத்தின் செலவுகளை கட்டுப்படுத்தும் அல்லது குறைக்கும் புதிய ஒரு அமைப்புக்கு தலைவராக எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளி கோடீஸ்வரர் விவேக் ராமசாமி என்பவரையும் ட்ரம்ப் நியமித்துள்ளார்.
மஸ்க் மற்றும் விவேக் ஆகியோர் நாடாளுமன்றத்தில் முக்கிய உறுப்பினர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளனர். மட்டுமின்றி, செலவுகளை குறைக்கும் பொருட்டு, பெடரல் ஊழியர்கள் ஆயிரக்கணக்கானோரை வேலையில் இருந்து நீக்கும் நடவடிக்கைகளையும் இந்த இருவர் கூட்டணி முன்னெடுக்க உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |