தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை - நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
தவெக அங்கீகரிக்கப்பட்ட கட்சி இல்லை என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
தவெக அங்கீகாரம்
கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது.
இந்நிலையில், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் செல்வகுமார், தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில், "கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் என 41 பேர் பலியாகியுள்ளனர். அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு பெண்கள், குழந்தைகள் என கூட்டம் கூட்டுவது மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் நடத்தை விதிகளுக்கு முரணானது.
சட்ட விதிகளை மீறும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடும் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யலாம் என உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உத்தரவிட்டுள்ளது.
விஜய் மற்றும் தவெகவினரின் அஜாக்கிரதையால் நெரிசல் ஏற்பட்டு, உயிர்பலி நேர்ந்துள்ளது. ஆனால் இந்த வழக்கில் விஜய் பெயரை சேர்க்காமல், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து எளிதில் தப்பிக்கும் வகையில் சாதாரண பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கட்சிகளின் கூட்டங்களில் பெண்கள், குழந்தைகளை ஈடுபடுத்த தடை விதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட விதிகளை கண்டிப்புடன் பின்பற்ற உத்தரவிட வேண்டும். இந்த விதிகளை மீறிய தவெகவின் அங்கீகாரத்தை ரத்து செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்.
விஜய் மீது சிறார் நீதி சட்டம், குழந்தை தொழிலாளர்கள் தடைச் சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு குறைந்தது தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க விஜய்க்கு உத்தரவிட வேண்டும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையம் விளக்கம்
இந்த மனு இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீ வஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக வெற்றிக் கழகம் அங்கீகரிக்கப்படாத கட்சி என்பதால் அந்தக் கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுப்ப முடியாது என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, இந்த மனுவில் உள்ள சில கோரிக்கைகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையதாக உள்ளதால், வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பான வழக்கை விசாரிக்க அமைக்கப்பட உள்ள சிறப்பு அமர்வு முன்பு இந்த மனுவை விசாரணைக்கு பட்டியலிட வேண்டும்" என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |