தீவிர வலதுசாரிகள் கூட்டணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்த பிரான்ஸ் மக்கள்: களைகட்டும் கொண்டாட்டம்
உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வந்த பிரான்ஸ் தேர்தலில், மக்கள் மீண்டும் ஒருமுறை தீவிர வலதுசாரிகளை புறக்கணித்துள்ளனர்.
ஒட்டுமொத்த மக்களுக்கும் நிம்மதி
பிரான்ஸ் நாடாளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் எவரும் எதிர்பாராமல் இடதுசாரிகள் கூட்டணி முன்னிலை பெற்றுள்ள தகவல் ஒட்டுமொத்த மக்களுக்கும் நிம்மதியை அளித்துள்ளது.
ஆனால் எந்தக் கூட்டணிக்கும் அறுதிப்பெரும்பான்மை இல்லை என்பதால், அடுத்து உருவாக இருக்கும் ஆட்சி தொடர்பில் நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. நடந்து முடிந்த இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில், எவரும் எதிர்பாராத வகையில், இடதுசாரிகள் கூட்டணி New Popular Front மொத்தமாக 182 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
அத்துடன் பெரும் பின்னடவை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி இமானுவல் மேக்ரானின் கூட்டணி 163 ஆசனங்களையும், அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று கருதப்பட்ட தீவிர வலதுசாரிகள் கூட்டணி 143 ஆசனங்களுடன் மூன்றாமிடத்திற்கும் தள்ளப்பட்டுள்ளது.
முதல் சுற்று தேர்தலில் 33 சதவிகித வாக்குகளுடன் பெரும் முன்னேற்றம் கண்ட தீவிர வலதுசாரிகள் கூட்டணி, பிரான்ஸ் மக்களின் சமயோசித முடிவால் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் குறிப்பிடுகின்றனர்.
இடதுசாரிகள் கூட்டணி பெரும்பாலான ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தாலும், ஆட்சி அமைக்க போதுமான எண்ணிக்கையில் 100 ஆசனங்களுக்கு மேல் குறைவாக பெற்றுள்ளது. அதாவது ஆட்சி அமைக்க தேவையான 289 ஆசனங்களை பிரான்சின் எந்தக் கூட்டணியும் பெறவில்லை.
தீவிர வலதுசாரிகள் கூட்டணி
இமானுவல் மேக்ரான் பதவியை துறப்பார் என தகவல்கள் கசிந்த நிலையில், தற்போது அவர் ஜனாதிபதியாக நீடிக்க இருப்பதாக உறுதி அளித்துள்ளார். ஆனால் தேர்தல் முடிவுகள் தொடர்பில் ஞாயிறன்று அவர் கருத்தேதும் தெரிவிக்கவில்லை.
மேலும், திங்கட்கிழமை பகல் தெளிவான முடிவு வெளியாகும் என்றே அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போதுள்ள சூழலை பொறுத்தவரையில், புதிய ஆட்சி அமைய சில வாரங்கள் எடுத்துக்கொள்ளலாம் என்றும், பாரிஸ் ஒலிம்பிக் இன்னும் 3 வாரங்களுக்குள் தொடங்க இருப்பதும் புதிய அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே திங்களன்று பகல் ஜனாதிபதி மேக்ரானை சந்தித்து தமது ராஜினாமா கடிதத்தை அளிக்க இருப்பதாக பிரதமர் Gabriel Attal தெரிவித்துள்ளார். மேலும், புதிய அரசாங்கம் அமையும் வரையில், தேவை என்றால், பிரதமராக தொடரவும் தாம் தயார் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தீவிர வலதுசாரிகள் கூட்டணி மூன்றாமிடத்திற்கு தள்ளப்பட்டதும், இடதுசாரிகள் கூட்டணி முதலிடத்திற்கு முன்னேறியதும் மக்களை நிம்மதியடைய வைத்துள்ளதுடன், தெருக்களில் கொண்டாட்டங்கள் களைக்கட்டத் தொடங்கியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |