ரியான் பராக், ஹெட்மயர் அதிரடி: பெங்களூரு அணியின் கனவை தகர்த்த ராஜஸ்தான்
பெங்களூரு அணிக்கு எதிரான வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது.
படிதார் 22 பந்தில் 34 ஓட்டங்கள்
இன்று நடைபெற்ற வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
இதையடுத்து பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கோலி மற்றும் டு பிளெஸ்சிஸ் ஆகியோர் களம் இறங்கினர். இதில் டு பிளெஸ்சிஸ் 17 ஓட்டங்களும், கோலி 33 ஓட்டங்களும் எடுத்த நிலையில் அவுட் ஆகினர்.
இதையடுத்து கேமரூன் கிரீன் மற்றும் ரஜத் படிதார் ஆகியோர் களம் இறங்கினர். இதில் கேமரூன் கிரீன் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் டக் அவுட் ஆனார்.
தொடர்ந்து படிதார் உடன் லோம்ரோர் ஜோடி சேர்ந்தார். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய படிதார் 22 பந்தில் 34 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து களம் இறங்கிய தினேஷ் கார்த்திக் 11 ஓட்டங்களில் அவுட் ஆனார்.
ஜெய்ஸ்வால் 45 (30) ஓட்டங்கள்
இறுதியில் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 172 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு தரப்பில் அதிகபட்சமாக ரஜத் படிதார் 34 ஓட்டங்கள் எடுத்தார்.
ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக அவேஷ் கான் 3 விக்கெட்டுகளும், அஸ்வின் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதனையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி சார்பில் ஜெய்ஸ்வால் மற்றும் டாம் கோலர் காட்மோர் ஆகியோர் களமிறங்கினர்.
சிறப்பான துவக்கம் தந்த இந்த ஜோடியில் டாம் கோலர் காட்மோர் 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஜெய்ஸ்வால் 45 (30) ஓட்டங்களில் கேட்ச் ஆனார். அடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் 17 ஓட்டங்களும், துருவ் ஜூரெல் 8 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து ரியான் பராகுடன், ஹெட்மயர் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ரன் சேர்த்த இந்த ஜோடி, அணியின் ரன்ரேட்டை வேகமாக உயர்த்தியது. தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த ஜோடியில் ரியான் பராக் 36 (26) ஓட்டங்களில் போல்ட் ஆனார்.
அவரைத்தொடர்ந்து ஹெட்மயர் 26 (14) ஓட்டங்களில் கேட்ச் ஆனார். இறுதியில் பவெல் 16 (8) ஓட்டங்களும், அஸ்வின் ரன் ஏதும் எடுக்காமலும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.
பெங்களூரு அணி வெளியேறியது
முடிவில் ராஜஸ்தான் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்கள் எடுத்தது. பெங்களூரு அணி சார்பில் சிராஜ் 2 விக்கெட்டுகளும், பெர்குசன், கரண் ஷர்மா மற்றும் கேமரூன் கிரீன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதன்மூலம் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்றது. இதனால் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இருந்து பெங்களூரு அணி வெளியேறியது.
வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி, முதலாவது தகுதி சுற்றில் தோற்ற ஐதராபாத் அணியுடன் மோத உள்ளது. அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு 2-வது அணியாக முன்னேறும். ஏற்கனவே கொல்கத்தா அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |