ராணியின் இறுதிச்சடங்கு நாளில் மற்ற உடல்களை அடக்கம் செய்ய தடையா? உண்மை என்ன?
மகாராணி உடல் அடக்கம் செய்யப்படும் நாளில் வேறு உடல்களை அடக்கம் செய்யக்கூடாது என பரவிய தகவலில் உண்மையில்லை.
சமூகவலைதளங்களில் வெளியான தகவலுக்கு விளக்கம்.
ராணி எலிசபெத் இறுதிச்சடங்கு நாளில் மற்ற உடல்களை அடக்கம் செய்ய தடை என்பது போல ஒரு தகவல் பரவிய நிலையில் அதில் உண்மையில்லை என்பது உறுதியாகியுள்ளது.
பிரித்தானிய மகாராணி எலிசபெத் கடந்த 8ஆம் திகதி உயிரிழந்தார். எலிசபெத் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் சார்லஸ் பிரித்தானிய மன்னராக முடிசூட்டிக் கொண்டார். எலிசபெத்தின் இறுதிச்சடங்கு வரும் செப்டம்பர் 19 அன்று வெஸ்ட்மின்ஸ்டரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் அடக்கம் செய்யப்படும் செப்டம்பர் 19 ஆம் திகதி வேறு யாருக்கும் இறுதிச் சடங்கு செய்யக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பகிரப்பட்டது.
AFP
இதன் காரணமாக அன்றைய இறுதிச் சடங்கிற்கு திட்டமிட்டிருப்பவர்கள் வேறு நாளுக்கு தள்ளி வைக்குமாறும் சிலர் தெரிவித்தனர். முக்கிய ஊடகங்கள் எதிலும் வெளியாகமல் சமூக வலைதளங்களில் மட்டும் வெளியான இந்த செய்தி காட்டுத்தீ போல பரவியது. பலரும் இதற்கு எதிராக எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்தநிலையில் இந்த தகவலானது பொய் என்பது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக NAFD UK எனப்படும் இறுதிச் சடங்கு இயக்குநர்களின் தேசிய சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செப்டம்பர் 19 திங்கட்கிழமை அன்று வேறு ஏதேனும் இறுதிச் சடங்குகள் நடைபெறுமா என்ற கேள்வி பலரால் எங்களிடம் கேட்கப்படுகிறது.
அன்றைய தினம் இறுதிச்சடங்கு நடத்த திட்டமிட்டபட்டவர்கள் அதை தொடரலாம். அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் திகதியை வேண்டுமானால் மாற்றி கொள்ளலாம். ஏனெனில் சிலர் தங்களின் சொந்த காரணங்களுக்காக வேறு நாட்களுக்கு ஒத்திவைக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.