இந்தியாவில் ஸ்டார்லிங்க் நுழைவதை தடுக்கிறார்கள்; எலான் மஸ்க் குற்றச்சாட்டு
elon musk accuse oligarchs block starlink in india: இந்தியாவில் ஸ்டார்லிங்க் நுழைவதை தடுக்கிறார்கள் என்ற எலான் மஸ்க் குற்றச்சாட்டிற்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
எலான் மஸ்க் குற்றச்சாட்டு
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம், நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் செயற்கைகோள் வழியாக இணைய சேவையை வழங்கி வருகிறது.

11,000க்கும் அதிகமான செயற்கைகோள்களை விண்ணில் ஏவியுள்ள எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ், அதன் மூலம் 12 மில்லியனுக்கு அதிகமான பயனர்களுக்கு இணைய சேவை வழங்கி வருகிறது.
இந்தியாவிலும் இணையசேவை வழங்க அனுமதி கோரி கடந்த 2022 ஆம் ஆண்டே ஸ்டார்லிங்க் விண்ணப்பித்திருந்தது. ஆனால் இன்னமும் இந்தியாவில் அனுமதி கிடைக்கவில்லை.
இந்நிலையில், இந்திய கிராமங்களில் பிராட்பேண்ட் இணைப்பு இல்லாததால் இங்கு ஸ்டார்லிங்க் தேவைப்படுகிறது என பயனர் ஒருவரின் பதிவிற்கு, இந்தியாவில் ஸ்டார்லிங்க் வரவிடாமல் தடுக்கிறார்கள் என எலான் மஸ்க் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீதான தங்களின் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக, சில பெரும் பணக்காரர்கள் எங்களைத் தடுக்கிறார்கள்.
+Unfortunately, we are being blocked by certain oligarchs in order to maintain their monopolistic chokehold on the Indian people. You can guess who they are … This is a crime against the people of India!
— Elon Musk (@elonmusk) October 7, 2026
அவர்கள் யார் என்பதை நீங்கள் யூகிக்கலாம்... இது இந்திய மக்களுக்கு எதிரான குற்றம்" என குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசு மறுப்பு
ஆனால், எலான் மஸ்கின் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள இந்திய தகவல் தொடர்பு அமைச்சகம், "செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகள் உட்பட அனைத்து தொலைத்தொடர்பு சேவைகளுக்கும் இந்தியாவில் "நியாயமான, பாகுபாடற்ற அங்கீகாரக் கட்டமைப்பு" உள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும், இந்தச் செயல்முறையின் ஒரு பகுதியாக, உரிமம் பெற்ற மூன்று நிறுவனங்களுக்கும் பாதுகாப்பு மதிப்பீடு தற்போது நடைபெற்று வருகிறது.
உரிமம் பெற்ற ஒரு நிறுவனத்திற்கு இந்தச் செயல்முறை முடிந்தவுடன், அது அலைக்கற்றை ஒதுக்கீட்டைக் கோரும் அடுத்த கட்டத்திற்குச் செல்லலாம். தற்போது, இந்த மூன்று நிறுவனங்களும் ஏறக்குறைய ஒரே ஒழுங்குமுறை நிலையில் உள்ளன" என தெரிவித்துள்ளது.
பார்தி ஏர்டெல் குழுமத்தின் ஆதரவு பெற்ற யூடெல்சாட் ஒன்வெப், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் ஸ்டார்லிங்க் ஆகிய மூன்று நிறுவனங்களும் இந்தியாவில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளன