ஜனாதிபதி தேர்தல்... தினமும் வாக்காளர் ஒருவருக்கு ரூ 8 கோடி பரிசளிக்கும் எலோன் மஸ்க்
எதிர்வரும் நவம்பர் மாதம் தேர்தல் வரையில் ஒவ்வொரு நாளும் வாக்காளர் ஒருவருக்கு 1 மில்லியன் டொலர் பரிசளிக்க இருப்பதாக பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
வாக்காளர்களில் ஒருவருக்கு
இணையத்தில் எலோன் மஸ்க் வெளியிட்டுள்ள அமெரிக்க அரசியலமைப்பை காப்போம் என்ற மனுவை ஆதரிக்கும் வாக்காளர்களில் ஒருவருக்கு இந்திய பண மதிப்பில் ரூ 8.40 கோடி பரிசளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக பென்சில்வேனியா பகுதியில் எலோன் மஸ்க் முன்னெடுத்த பரப்புரை நிகழ்ச்சியில், John Dreher என்பவருக்கு முதற்கட்டமாக ரூ 8.40 கோடி பரிசாக அளித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்பை கட்டாயம் வெற்றிபெற வைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் எலோன் மஸ்க் தற்போது மில்லியன் டொலர் பரிசு திட்டத்தை முன்னெடுத்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
போட்டி மிகுந்த மாகாணங்களில் டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக எலோன் மஸ்க் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். வாக்காளர்களை ஈர்க்கும் பொருட்டு ஒவ்வொரு நாளும் ஒரு வாக்காளருக்கு 1 மில்லியன் டொலர் பரிசளிக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
மேலும் ட்ரம்புக்கு ஆதரவாக அமைப்பு ஒன்றையும் எலோன் மஸ்க் துவங்கியுள்ளார். இந்த அமைப்பு போட்டி மிகுந்த மாகாணங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
வாக்காளர்களை ஒருங்கிணைப்பதும், பதிவு செய்வதும், வாக்களிக்க வைப்பதும் இவர்களின் பணியாக உள்ளது. ஆனால் இந்த அமைப்புக்கு போதுமான ஆதரவு இல்லாத நிலையில், தற்போது நாள் ஒன்றுக்கு 1 மில்லியன் டொலர் என்ற அறிவிப்பை எலோன் மஸ்க் வெளியிட்டுள்ளார்.
கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக
சனிக்கிழமை பரப்புரை கூட்டம் ஒன்றில் பேசிய எலோன் மஸ்க், கமலா ஹாரிஸ் ஜனாதிபதியாக பொறுப்பேற்றால், அமெரிக்க மக்கள் இனி தேர்தல்களை சந்திக்கும் நிலை வராது என்றார்.
மேலும், ட்ரம்பிற்கு எதிரான இரண்டு கொலை முயற்சிகள் அவர் தேர்தல் களத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளர் என்பதை நிரூபிப்பதாகவும் மஸ்க் தெரிவித்துள்ளார். ஆனால் ஒருவர் கூட கமலா ஹாரிஸ் மீது தாக்குதல் முயற்சி எடுக்கவில்லை, காரணம் கைப்பாவையை கொல்வது வீண் என்றார்.
இணையத்தில் தாம் வெளியிட்டுள்ள மனுவுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், அதில் ஒரு வாக்காளருக்கு பரிசு உறுதி என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே டொனால்டு ட்ரம்பை ஆதரித்து தேர்தல் பணிக்காக 75 மில்லியன் டொலர் நன்கொடை அளித்துள்ளார். மேலும், ட்ரம்ப் வெற்றிபெறவில்லை என்றால் தாம் சிறையில் தள்ளப்படுவது உறுதி என்றும், பரப்புரை ஒன்றில் எலோன் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |