ட்விட்டரை கட்டுப்பாட்டில் எடுத்த எலான் மஸ்க்; இந்திய வம்சாவளியினர் உட்பட முக்கிய நிர்வாகிகள் நீக்கம்
ட்விட்டரை 44 பில்லியன் டொலர் கொடுத்து எலான் தனக்கு சொந்தமாக்கிக்கொண்டார்.
தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் உட்பட ட்விட்டரின் முக்கிய தலைமை பொறுப்புகளில் இருந்த இரண்டு இந்திய வம்சாவளியினரை எலான் மஸ்க் பணிநீக்கம் செய்தார்.
ட்விட்டரை வியாழக்கிழமை மாலை அதிகாரப்பூர்வமாக தனதாக்கிக்கொண்ட உலக பெரும்பணக்காரர் எலான் மஸ்க், தனது உரிமையை வெளிப்படுத்தும் விதமாக முதல் நடவடிக்கையாக, சில முக்கிய நிர்வாகிகளை நிறுவனத்திலிருந்து நீக்கினார். அதில் இரண்டு இந்திய வம்சாவளியினர் அடங்குவர்.
இந்திய வம்சாவளியினர்களாகிய தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் (Parag Agrawal) மற்றும் சட்ட விவகாரங்கள் மற்றும் கொள்கைத் தலைவர் விஜயா காடே (Vijaya Gadde) ஆகியோரை விழக்கிழமை இரவே எலான் மஸ்க் நீக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்களைத் தொடர்ந்து, தலைமை நிதி அதிகாரி நெட் செகல் (Ned Segal), பொது ஆலோசகர் சீன் எட்ஜெட் மற்றும் தலைமை வாடிக்கையாளர் அதிகாரி சாரா பெர்சனெட் (Sarah Personette) ஆகியோரை நிறுவனத்திலிருந்து வெளியேற்றினார்.
எலான் மஸ்க் 44 பில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடித்து, விழக்கிழமை மாலை ட்விட்டர் நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தார். தன்னை தவறாக வழிநடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட உயர் நிர்வாகிகளை உடனடியாக நீக்கினார்.
TheOrg/GettyImages/Twitter
நீக்கப்பட்ட நிர்வாகிகளில் ஒருவர் உடனடியாக ட்விட்டரின் அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பொறுப்பை எலான் மஸ்க் தானே எடுத்துக்கொள்வார் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், அவர் அந்த பாத்திரத்தில் நீண்டகாலம் இருப்பார் என்றும் கூறியுள்ளனர்.