ட்விட்டரின் புதிய சிஇஓவாக எலான் மஸ்க்கை மாற்றவிருக்கும் பெண் - யார் அவர்?
ட்விட்டரின் புதிய சிஇஓ-வாக பெண் நிருவாகி ஒருவரை நியமிக்கவுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
சமீபத்தில் எலான் மஸ்க் பதிவிட்ட ட்வீட்டில், இன்னும் ஆறு வாரங்களில் ட்விட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக ஒருவர் தனது பணியை தொடங்குவார் என்று கூறினார். ஆனால் அவர் யார் என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை.
இந்நிலையில், அப்பெண் என்பிசி யுனிவர்சல் மீடியாவின் நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது.
லிண்டா யாக்காரினோ
Linda Yaccarino
என்பிசி யுனிவர்சலின் (NBCUniversal) விளம்பரப் பிரிவின் தலைவரான லிண்டா யாக்காரினோ (Linda Yaccarino), ட்விட்டரின் புதிய தலைமைச் செயல் அதிகாரி ஆவதற்கு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் மியாமியில் நடந்த ஒரு விளம்பர மாநாட்டில் யாக்காரினோ மஸ்க்கை பேட்டி கண்டார். மாநாட்டில், யாக்கரினோ மஸ்க்கை கைதட்டல்களுடன் வரவேற்க பார்வையாளர்களை ஊக்குவித்தார் மற்றும் அவரது பணி நெறிமுறைகளைப் பாராட்டினார்.
இதன்மூலம் இருவருக்கும் ஏற்கெனவே நட்புறவு உள்ளது. மாநாட்டின்போது, மஸ்க்கும் அவரை நண்பர் என அழைத்தது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டருக்கான புதிய தலைவரைக் கண்டுபிடித்து, அதன் தலைமை தொழில்நுட்ப வல்லுநராக புதிய பொறுப்பை ஏற்கப்போவதாக எலோன் மஸ்க் அறிவித்துள்ளார்.
Getty Images
ட்விட்டரை வாங்கிய பின் எலான் மஸ்க்
கடந்த அக்டோபர் மாதம் எலான் மஸ்க் $44 பில்லியனுக்கு ட்விட்டரை வாங்கினார். அதனைத் தொடர்ந்து, ட்விட்டரில் தான் நினைத்த மாற்றங்களை கொண்டுவரும் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே அதன் சிஇஓ பொறுப்பில் இருப்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
டிசம்பரில், தான் இந்த பதவியிலிருந்து விலகவேண்டுமா என்று மஸ்க் தனது ட்விட்டர் பின்தொடர்பவர்களிடம் கருத்தை கேட்டார். அதற்கு 57.5% பேர் ஆம் என்று தெரிவித்தனர். அதனை ஏற்றுக்கொண்டு, புதிய நபரை பொறுப்பில் அமர்த்திவிட்டு விரைவில் விலக முன்வந்துள்ளார்.