ரூ 33,400 கோடியை இழந்த எலோன் மஸ்க்... 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்பை எட்டிய முகேஷ் அம்பானி
இந்தியாவின் பெரும் கோடீஸ்வரரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி, மதிப்புமிக்க 100 பில்லியன் டொலர் சொத்து மதிப்புடையவர்களின் வட்டத்தில் மீண்டும் இணைந்துள்ளார்.
4 பில்லியன் டொலர்
அதிக சொத்து மதிப்பு பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் எலோன் மஸ்க், செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் சுமார் 4 பில்லியன் டொலர் வருவாயை இழந்துள்ளார். அதே நாளில் அதிக லாபம் ஈட்டியவர் வரிசையில் மெற்றா தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் இணைந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் எலோன் மஸ்க் சுமார் ரூ 33,437 கோடி தொகையை இழந்துள்ளார். இதனால் அவரது மொத்த சொத்து மதிப்பு 349 பில்லியன் அமெரிக்க டொலராக (இந்திய மதிப்பில் ரூ 29.22 லட்சம் கோடி) சரிவடைந்துள்ளது.
இருப்பினும், 2024ல் இதுவரை எலோன் மஸ்கின் சொத்து மதிப்பானது 120 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. இதனால் அவர் உலகின் பெரும் கோடீஸ்வரர் என்ற அந்தஸ்தை தக்கவைத்துக்கொண்டுள்ளார்.
100 பில்லியன் டொலர்
முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பில் செவ்வாய்க்கிழமை மட்டும் 1.30 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது. இதனால் அவரது மொத்த சொத்து மதிப்பு 100 பில்லியன் டொலர் தொகையை எட்டியது.
இந்த ஆண்டு மட்டும் இதுவரை 3.84 பில்லியன் டொலர் தொகையை முகேஷ் அம்பானி சம்பாதித்துள்ளார். இதனால் உலகின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலில் 17வது இடத்தில் முகேஷ் அம்பானி முன்னேறியுள்ளார்.
மெற்றா தலைமை நிர்வாக அதிகாரியான மார்க் ஜூக்கர்பெர்க் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் சுமார் 7.20 பில்லியன் டொலர் சம்பாதித்துள்ளார். இதனால் அவரது சொத்து மதிப்பு 217 பில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. இரண்டாவது இடத்தில் 234 பில்லியன் டொலர் தொகையுடன் ஜெஃப் பெசோஸ் உள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |