டிரம்ப் அரசில் இருந்து விலகவுள்ள எலான் மஸ்க் - என்ன காரணம்?
அமெரிக்க அரசின் DOGE துறையில் இருந்து விலக உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.
எலான் மஸ்க்
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், Tesla, Space X, X, Nueralink உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்பிற்கு ஆதரவாக எலான் மஸ்க் பிரச்சாரம் செய்ததோடு, பல கோடிகளை நன்கொடையாக வழங்கினார்.
இந்த தேர்தலில் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப், அதற்கு கைமாறாக அமெரிக்க அரசில் புதிதாக அரசாங்க செயல்திறன் துறையை(DOGE) உருவாக்கி, அதன் தலைமை பொறுப்பில் எலான் மஸ்க்கை நியமித்தார்.
இந்த துறைக்கு எலான் மஸ்க் பொறுப்பேற்ற பின், அமெரிக்க அரசின் பல்வேறு துறைகளில் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதோடு, பல நாடுகளுக்கு அமெரிக்க அரசு சார்பில் வழங்கப்பட்ட நிதி நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த பதவியில் இருந்து மே மாதம் விலக உள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
DOGE இல் இருந்து விலகும் எலான் மஸ்க்
இது குறித்து பேசிய அவர், "130 நாட்களில், அமெரிக்க அரசின் செலவினங்களை ஒரு ஒரு டிரில்லியன் டொலர்கள் குறைக்கத் திட்டமிட்டோம். அதற்கு தேவையான பெரும்பாலான பணிகளை முடித்துவிட்டோம் என நம்புகிறேன்.
முறைகேடுகளைக் கண்டறிந்து அதை தடுத்து நிறுத்துவதும், தேவையற்ற செலவுகளைக் குறைப்பதும்தான் எங்களின் முதல் நோக்கம். இதன் மூலம் தினசரி $4 பில்லியன் வரை செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
நாங்கள் எடுத்த நடவடிக்கைகள் இதுவரை வெற்றியைத் தருவதாகவே உள்ளது. எங்கள் நடவடிக்கை வெற்றி அடையாமல் போனால் அமெரிக்கா கடனில் மூழ்கிவிடும்.
அமெரிக்க அரசில் தேவையற்ற செலவுகளும், மோசடிகளும் நிறைய இருந்தன. முக்கியமான அரசு சேவைகளையும் பாதிக்காமல், 15 சதவீதம் வரை செலவைக் குறைக்க முடியும் என நம்புகிறோம்.
இந்த வேலைகளை முடித்து விட்டு மே மாதம் நான் DOGE துறையில் இருந்து விலக உள்ளேன். இந்த நடவடிக்கை மூலம் தற்போது வரை $115 பில்லியனை மிச்சப்படுத்தியுள்ளோம். எங்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வருகிறது. இதெல்லாம் நாங்கள் எதிர்பார்த்தது தான்" என தெரிவித்துள்ளார்.
DOGE துறைக்கு எலான் மஸ்க் நியமிக்கப்பட்டதில் இருந்து, பல்வேறு தரப்பினர் இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அவரது டெஸ்லா நிறுவனத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். டெஸ்லாவின் பங்குகள் சரிவதால், எலான் மஸ்க் டெஸ்லா CEO பதவியில் இருந்து விலக வேண்டும் என டெஸ்லா முதலீட்டாளர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |