ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்காக இதுவரை ரூ.1100 கோடி செலவிட்ட எலோன் மஸ்க்
டொனால்டு ட்ரம்பின் தேர்தல் வெற்றிக்காக பெரும் கோடீஸ்வரர் எலோன் மஸ்க் மேலும் 56 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளார்.
பல மில்லியன் டொலர்
இதுவரை ட்ரம்பின் வெற்றிக்காக எலோன் மஸ்க் செலவிட்டுள்ள தொகை 132 மில்லியன் டொலர், அதாவது இந்திய மதிப்பில் ரூ 1100 கோடி என்றே தெரிய வந்துள்ளது.
டெஸ்லா நிறுவனரான எலோன் மஸ்க் 2024 தேர்தலை முன்னிட்டு அக்டோபர் மாதம் முதல் பாதியில் 43.6 மில்லியன் டொலர் நன்கொடையாக அளித்துள்ளார். டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக எலோன் மஸ்க் உருவாக்கியுள்ள America PAC என்ற அமைப்புக்கு மஸ்க் இதுவரை அளித்துள்ள தொகை 118.6 மில்லியன் டொலர்.
இது மட்டுமின்றி, பல மில்லியன் டொலர் தொகையை செலவிட்டு, ட்ரம்புக்கான ஆதரவையும் அதிகரிக்க செய்து வருகிறார். எதிர்வரும் நவம்பர் 5ம் திகதி தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், அக்டோபர் 16ம் திகதி வரையான தரவுகள் மட்டுமே வெளியாகியுள்ளது.
கடும் போட்டி இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் ட்ரம்புக்கு ஆதரவாக வாக்காளர்களை திரட்டும் பணியில் எலோன் மஸ்க் உருவாகியுள்ள அமைப்பு கடுமையாக உழைத்து வருகிறது.
ஒழுங்குமுறைகளை மீறியுள்ளதாக
இளையோர்களை ஈர்க்கும் பல்வேறு நடவடிக்கைகளையும் எலோன் மஸ்க் முன்னெடுத்து வருகிறார். America PAC மட்டுமின்றி, ட்ரம்புக்கு ஆதரவாக செயல்படும் பல்வேறு குழுக்களுக்கும் எலோன் மஸ்க் பல மில்லியன் டொலர்களை செலவிட்டு வருகிறார்.
ஆனால் எலோன் மஸ்கின் நிறுவனங்கள் பில்லியன் கணக்கான டொலர்கள் மதிப்புள்ள அரசாங்க ஒப்பந்தங்களை கைப்பற்றியுள்ளதும் தனிப்பட்ட முறையில் அரசாங்க ஒழுங்குமுறைகளை மீறியுள்ளதாகவும் கூறப்படும் நிலையிலேயே டொனால்டு ட்ரம்புக்கு ஆதரவாக தேர்தலில் அவர் களமிறங்கியுள்ளார்.
எலோன் மஸ்கின் அரசியல் நடவடிக்கைகள் சில அரசாங்க அதிகாரிகளை கோபம் கொள்ள வைத்துள்ளது. கடும் போட்டி காணப்படும் மாகாணங்களில் வாக்காளர் ஒருவருக்கு தினசரி 1 மில்லியன் பரிசு என்ற எலோன் மஸ்கின் திட்டம் தொடர்பில் நீதித்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |