சர்வதேச அரசியலில் மூக்கை நுழைக்கும் எலான் மஸ்க்: ஜேர்மானிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்றதிலிருந்தே, உலக அரசியல்வாதி அவதாரம் எடுத்துள்ள ட்ரம்பின் நண்பரான கோடீஸ்வரர் எலான் மஸ்க், சர்வதேச அரசியலில் மூக்கை நுழைத்துவருகிறார்.
சர்வதேச அரசியலில் மூக்கை நுழைக்கும் எலான் மஸ்க்
கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோவை, ’ஏய் பெண்ணே, நீ இப்போது கனடாவின் ஆளுநர் அல்ல, நீ என்ன சொன்னாலும், அதற்கு இப்போது மதிப்பில்லை என்று கூறி கேலி செய்தார் எலான் மஸ்க்.
பிரித்தானியாவில் மீண்டும் பொதுத்தேர்தல் நடத்தவேண்டும் என்று கூறி பிரித்தானிய அரசியலில் தலையிட்டார் எலான் மஸ்க்.
அடுத்ததாக, ஜேர்மனியைக் காப்பாற்ற AfD கட்சியால்தான் முடியும் என்றும், ஜேர்மன் சேன்ஸலரான ஷோல்ஸ் உடனடியாக ராஜினாமா செய்யவேண்டும், அவர் திறமையில்லாத முட்டாள்’ என்று கூறி ஜேர்மன் அரசியலில் பரபரப்பை உருவாக்கினார் எலான் மஸ்க்.
ஜேர்மானிய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?
இந்நிலையில், இப்படி எலான் மஸ்க் தேவையில்லாமல் சர்வதேச அரசியலில் மூக்கை நுழைப்பதைக் குறித்து ஜேர்மானிய மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிவதற்காக ஆய்வொன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.
YouGov என்னும் அமைப்பு மேற்கொண்ட அந்த ஆய்வில், எலான் மஸ்க் தேவையில்லாமல் சர்வதேச அரசியலில் மூக்கை நுழைப்பது ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல என்றும், அவர் அப்படி கருத்து தெரிவிக்கும் எந்த நாட்டையும் குறித்தோ, அந்த நாட்டு மக்களின் பிரச்சினைகள் குறித்தோ அவருக்கு சரியாகத் தெரியாது என்றும் மக்கள் கருதுவது தெரியவந்துள்ளது.
ஜேர்மனியிலும் பிரித்தானியாவிலும் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வில், தங்கள் நாடுகள் எலான் மஸ்குடன் நல்ல உறவு வைத்துக்கொள்வது அவசியமற்ற ஒன்று என இரு நாட்டு மக்களிலும் 54 சதவிகிதம் பேர் கருதுவதாக அந்த ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
எலான் மஸ்கை அலட்சியப்படுத்துவது நல்லது என 50 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளார்கள்.
ஜேர்மானியர்களில் ஆய்வில் பங்கேற்றவர்களில் 73 சதவிகிதம் பேரும், பிரித்தானியாவில் 69 சதவிகிதம் பேரும், எலான் மஸ்க் தங்கள் நாட்டு அரசியலில் தலையிடுவது ஏற்றுக்கொள்ளத்தக்கதல்ல என்று கூறியுள்ளார்கள்.
சொல்லப்போனால், எலான் மஸ்க் அமெரிக்க அரசியலில் தலையிடுவதையே ஏற்றுக்கொள்ள முடியாது என பலரும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |