அமெரிக்காவின் மூன்றாவது பணக்காரப்பெண்ணை வம்புக்கிழுத்த எலான் மஸ்க்: பதிலுக்கு அவர் செய்த அரிய செயல்
அமெரிக்காவின் மூன்றாவது பணக்காரப்பெண்ணும், உலகின் 47ஆவது பணக்காரப்பெண்ணும், பிரபல நாவலாசிரியரும் கொடையாளியும், அமேசான் நிறுவனரின் முன்னாள் மனைவியுமான மெக்கின்ஸி ஸ்காட் என்னும் பெண், தொண்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய நன்கொடை ஒன்றை அளித்துள்ளார்.
வம்புக்கிழுத்த எலான் மஸ்க்
அமேசான் நிறுவனரான ஜெஃப் பெசோஸின் முன்னாள் மனைவியான மெக்கின்ஸி ஸ்காட்டை, தேவையில்லாமல் வம்புக்கிழுத்திருந்தார் உலகப் பணக்காரரான எலான் மஸ்க்.
மெக்கின்ஸி அளித்து வரும் நன்கொடைகள் குறித்து எக்ஸில் விமர்சித்திருந்த ஒருவருக்கு பதிலளிக்கும் வகையில் எலான் மஸ்க் வெளியிட்ட ஒரு செய்தியில், மேற்கத்திய நாகரீகம் சாவதற்கான காரணங்களில் ஒன்றாக, தங்கள் முன்னாள் கணவரை வெறுக்கும் பெரும் பணக்காரர்களின் முன்னாள் மனைவிகளையும் சேர்க்கவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
அமைதியாக அளிக்கப்பட்ட நன்கொடை
ஆனால், அதற்கெல்லாம் பதிலளித்துக்கொண்டிருக்காமல், சில தொண்டு நிறுவனங்களுக்கு மீண்டும் பெரும் தொகை ஒன்றை நன்கொடையாக வழங்கியுள்ளார் மெக்கின்ஸி.
அவர், 361 சிறிய தொண்டு நிறுவனங்களுக்கு 640 மில்லியன் டொலர்களை (இலங்கை மதிப்பில் 1,93,03,34,08,000 ரூபாய்) நன்கொடையாக வழங்கியுள்ளார்.
திருமணம் செய்து 25 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த மெக்கின்ஸியும் பெசோஸும் விவாகரத்து செய்து பிரிந்தபோது, அவருக்கு 38 பில்லியன் டொலர்கள் ஜீவனாம்சம் வழங்கப்பட்டது. அப்போதே அவர் அதில் ஒரு தொகையை தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடையாக அளிக்க இருப்பதாக வாக்குக் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.