கனடாவில் அவசர நிலை பிறப்பிப்பு! இனி என்னென்ன நடக்கும்? சில தகவல்கள்
கனடாவில் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக போராட்டங்கள் தொடரும் நிலையில், நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக, கனடா பெடரல் அரசு அவசர நிலையை பிறப்பித்துள்ளது.
கனேடியர்களின் உயிருக்கோ, நலனுக்கோ அல்லது பாதுகாப்புக்கோ பயங்கர ஆபத்து ஏற்படும் பட்சத்தில், அசாதாரண சூழல்களில் சிறப்பு நடவடிக்கைகள் எடுக்க அரசுக்கு இந்த அவசர நிலை அதிகாரம் வழங்குகிறது.
அவசர நிலை என்னும் சட்டம் அரசுக்கு நான்கு வித சூழல்களை எதிர்கொள்வதற்கு அதிகாரம் அளிக்கிறது. அவையாவன, பொது நலம், பொது ஒழுங்கு, சர்வதேச அவசர நிலை மற்றும் போர்க்கால அவசர நிலை என்பவையாகும்.
தற்போதைய சூழலில், பொது ஒழுங்கைக் கட்டுப்படுத்துவதற்காக இந்த அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன் பொருள் என்னவென்றால், பொது அமைதியைக் குலைக்கும் வகையில் பொது மக்கள் கூடுதலைத் தடுக்கவும், ஒரு குறிப்பிட்ட இடத்திலிருந்து அல்லது குறிப்பிட்ட இடத்துக்கு பயணத்தைத் தடுக்கவும், ஒரு குறிப்பிட்ட இடத்தை பயன்படுத்துவதைத் தடுக்கவும், பாதுகாக்கப்பட்ட இடங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவும், இந்த சட்டம் கேபினட்டுக்கு அதிகாரம் அளிக்கிறது.
அத்துடன், அத்தியாவசிய சேவைகளை அளிக்க ஒரு நபருக்கு அல்லது ஒரு பிரிவினருக்கு உத்தரவிடவும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதையும் விநியோகிப்பதையும் ஒழுங்குபடுத்தவும் கேபினட்டுக்கு இந்த சட்டம் அதிகாரம் அளிக்கிறது.
அதாவது கூட்டம் கூடுவதையும் போராட்டங்களையும் தடை செய்யும் அதே நேரத்தில், மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படாமல் இருக்க தக்க நடவடிக்கைகளை அரசு எடுக்க இந்த அவசர நிலைச் சட்டம் வழிவகுக்கிறது.
Ottawa போராட்டங்களைப் பொருத்தவரையில், மக்கள் சட்டவிரோதமாக கூடுவதைத் தடுக்கவும், தடையாக நிறுத்தப்பட்டுள்ள பெரிய ட்ரக்குகளை அகற்ற உத்தரவிடவும் அரசுக்கு இந்த சட்டம் அதிகாரம் வழங்குகிறது.
ஆக, இந்த அவசர நிலையின்போது சட்டம் ஒழுங்கை அமுல்படுத்துவதற்காக போராட்டக்காரர்களுக்கு அபராதம் விதிக்கவும், அவர்களை சிறையில் தள்ளவும் பொலிசாருக்கு அதிகாரம் வழங்கப்படும்.
போராட்டக்காரர்களுக்கு நிதி உதவி செய்வதை வங்கிகளும் நிதி நிறுவனங்களும் நிறுத்த கேபினட் உத்தரவிட்டுள்ளது.
இராணுவம் களமிறக்கப்படுமா?
பொலிசாருக்கு உதவும் வகையில் இராணுவம் அழைக்கப்படுமேயொழிய, இராணுவமே சட்டம் ஒழுங்குக் கட்டுப்பாட்டைக் கையில் எடுத்துக்கொள்ளாது.
எவ்வளவு காலத்துக்கு இந்த நிலை நீடிக்கும்?
கேபினட் அவசர நிலை பிறப்பித்ததுமே அமுலுக்கு வரும் அதிகாரங்கள், 30 நாட்களுக்கு நீடிக்க அனுமதி உள்ளது. அவை நீட்டிக்கப்படவும் கூடும். இதற்கிடையில், ட்ரூடோவும் அவரது அமைச்சர்களும், ஏழு நாட்களுக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனேட்டின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.