மூன்று நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை சேகரித்துவைக்க கனடா ஆலோசனை
Public Safety Canada advises Canadians to be prepared to go at least three days without running water or electricity: தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லாத நிலை ஏற்படும் பட்சத்தில், மூன்று நாட்களுக்காவது அதை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறு கனடா பொது பாதுகாப்பு அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.
பிரித்தானியா முதலான நாடுகளைப் போல, கனடாவும் மூன்று நாட்களுக்கான அத்தியாவசியப் பொருட்களை சேகரித்துவைக்க தன் குடிமக்களுக்கு ஆலோசனை தெரிவித்துள்ளது.
பொது பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு
பல நாடுகள், நெருக்கடியான காலகட்டத்தை எதிர்கொள்ளத் தயாராகுமாறு தங்கள் குடிமக்களை அறிவுறுத்திவரும் நிலையில், கனடாவும் அத்தகைய ஆலோசனை ஒன்றை வழங்கியுள்ளது.

என்றாலும், மக்களை அச்சுறுத்தும் வகையில் இல்லாமல், ’அவசர காலங்களில், குறைந்தபட்சம் 72 மணி நேரத்திற்குத் தங்களையும் தங்கள் குடும்பத்தினரையும் கவனித்துக்கொள்ளத் தயாராக இருக்குமாறு கனேடியர்கள் பல ஆண்டுகளாக ஊக்குவிக்கப்பட்டு வருகின்றனர்’ என்று கூறியுள்ளார் கனடாவின் பொது பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ஸாரா மாலிக்.
இந்நிலையில், கனடாவின் பேரிடர் மீட்பு நிறுவனத்தில் பயிற்றுவிப்பாளராக இருக்கும் சூசன் பெர்னியர் என்பவர், அரசாங்கங்கள் குறைந்தது மூன்று தசாப்தங்களாக இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்றும், என்றாலும், அவற்றைப் பின்பற்ற இதுவே சரியான நேரம் என்று கூறியுள்ளார்.
அத்துடன், கனேடியர்கள், குறைந்தபட்சம் ஏழு நாட்களுக்குத் தேவையான பொருட்களைச் சேமித்து வைக்குமாறு அவர் அறிவுறுத்துகிறார்.
இதற்கிடையில், 72 மணிநேரம் என்பது குறைந்தபட்ச பரிந்துரை என்று கூறியுள்ள கனடா பொது பாதுகாப்புத் துறை, சில பகுதிகளில் அடிப்படை சேவைகளை மீட்டெடுக்கவோ அல்லது அவசரகாலப் பணியாளர்கள் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களையும் சென்றடையவோ அதிக நேரம் ஆகக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.