பிரித்தானியாவில் கல்லூரி தலைவர் குடும்பத்தின் மர்ம மரணம்: மனைவி, குழந்தையை சுட்டுக் கொன்ற கணவன்
பிரித்தானியாவின் எப்சம் கல்லூரி தலைவர் எம்மா பாட்டிசன் அவரது கணவர் ஜார்ஜ் என்பவரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி தலைவர் மர்ம மரணம்
பிரித்தானியாவின் எப்சம் கல்லூரி தலைவரான எம்மா பாட்டிசன்(45) அவரது கணவர் ஜார்ஜ்(39) மற்றும் அவர்களது மகள் லெட்டி(7) ஆகிய மூவரும் ஞாயிற்றுக்கிழமை 01: 10 மணியளவில் பள்ளி வளாகத்தில் உள்ள சொத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து தனியார் பள்ளி வளாகத்திற்கு வந்த பொலிஸார் விசாரணையை தீவிரப்படுத்தினர், முதல் கட்ட சோதனையில், இந்த மர்ம மரணம் மூன்றாவது நபரால் ஏற்பட்டு இருக்கவில்லை என்றும் நிச்சயமாக இவை தன்னிச்சையான செயலாக தான் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தனர்.
மனைவியை சுட்டுக் கொன்ற கணவன்
இந்நிலையில் பொலிஸார் நடத்திய தொடர் விசாரணையில் எப்சம் கல்லூரி தலைவர் எம்மா பாட்டிசனுக்கும் அவரது கணவர் ஜார்ஜ்-க்கும் இடையே தொடர் சண்டை இருந்து வந்தாக தெரிவித்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை முற்பகுதியில் கணவன் ஜார்ஜ் மற்றும் மனைவி எம்மா பாட்டிசன் இடையே நடந்த சண்டையின் உச்சத்தில், கணவன் ஜார்ஜ் துப்பாக்கியால் மனைவி எம்மா பாட்டிசன் மற்றும் 7 வயது மகள் லெட்டி இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளார்.
பின் தானும் அதே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என பொலிஸார் விசாரணையின் முடிவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் சம்பவ இடத்தில் இருந்து ஜார்ஜ் பயன்படுத்தி கைத்துப்பாக்கியை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
அத்துடன் கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் கணவர் ஜார்ஜ் அளித்த புகாரின் அடிப்படையில் மனைவி மற்றும் எப்சம் கல்லூரி தலைவரான எம்மா பாட்டிசன் குடும்ப வன்முறை தொடர்பாக பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் வழக்கு எதுவும் பதியப்படாமல் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.