பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரானுக்கு மறுபடியும் ஒரு மூக்கறுப்பு
மீன்பிடித்தல் விவகாரத்தில் பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரானுக்கு மீண்டும் ஒரு மூக்கறுப்பே பதிலாக கிடைத்துள்ளது.
பிரெக்சிட்டுக்குப் பிறகு, பிரித்தானிய கடல் பகுதியில் மீன் பிடிக்க பிரெஞ்சு மீன்பிடி படகுகளுக்கு பிரித்தானியா உரிமம் வழங்குவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் அவ்வப்போது உரசல்கள் இருந்தவண்ணம் உள்ளது.
அதற்காக பிரித்தானியாவை தண்டிக்க விரும்பும் மேக்ரான், ஐரோப்பிய ஒன்றிய தலைமையகமாக கருதப்படும் பிரஸ்ஸல்சுக்கு தனது அமைச்சர்களை அனுப்பி வைத்திருந்தார்.
ஆனால், பிரான்சின் சக ஐரோப்பிய நாடான பெல்ஜியம், பிரான்ஸ் பிரதமர் Jean Castex மற்றும் ஐரோப்பிய அமைச்சர் Clement Beaune ஆகியோரின் கோரிக்கைகளை நிராகரித்துவிட்டது.
பெல்ஜியம் நாட்டின் பிரதமரான Alexander De Croo மற்றும் வெளியுறவு அமைச்சரான Sophie Wilmes இருவரும், பிரித்தானியா மீது தடை விதிக்கக்கோரிய பிரான்சின் கோரிக்கையை நிராகரித்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவுக்கு அருகிலும், சேனல் தீவுகளுக்கு அருகிலும் மீன் பிடிப்பது தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினை, பிரித்தானியாவுக்கும் பிரான்சுக்கும் இடையிலான பிரச்சினை. அது அவ்விரண்டு நாடுகளும் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கவேண்டிய பிரச்சினை என பெல்ஜியம் தரப்பு கூறிவிட்டதாம்.
இது எங்கள் சண்டை அல்ல, பிரித்தானியாவுடனான பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கவே நாங்கள் விரும்புகிறோம் என அவர்கள் கூறிவிட, வரும் ஏப்ரல் மாதம் பிரான்சில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மேக்ரானுக்கு மீண்டும் ஒரு தலைகுனிவு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து மூத்த ஐரோப்பிய ஒன்றிய தூதரக அலுவலர் ஒருவர் கூறும்போது, பிரான்ஸ் உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக மீன்பிடித்தல் பிரச்சினையை பயன்படுத்திக்கொள்ள முயல்வது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது என்றார்.
அதேபோல் மற்றொரு அலுவலரும், இந்த பிரச்சினையில் சிக்கிக்கொள்வதை பல ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் தவிர்க்கவே விரும்புவதாக தெரிவித்தார்.