கொரோனா பரவலின்போது பூக்களுக்காக மட்டும் 600,000 டொலர்கள் செலவு செய்த ஜனாதிபதி: கொந்தளிக்கும் நாட்டு மக்கள்
உலகமெல்லாம் கொரோனா பரவிக்கொண்டிருந்த நேரத்தில், பூக்களுக்காக மட்டுமே 600,000 டொலர்கள் செலவு செய்துள்ள ஒரு நாட்டின் ஜனாதிபதியையும் அவரது மனைவியையும் மக்கள் கரித்துக்கொட்டுகிறார்கள்.
இப்படி மக்களின் தூற்றுதலுக்கு ஆளாகியிருப்பது, வேறு யாருமில்லை, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானும் அவரது காதல் மனைவி பிரிஜிட் மேக்ரானும்தான்.
ஆம், பாரீஸிலிருக்கும் தங்கள் அதிகாரப்பூர்வ இல்லமான Elysee Palaceஐ பூக்களால் அழகு படுத்துவதற்காக, 540,709 டொலர்கள் (600,000 யூரோக்கள்) செலவிட்டுள்ளனர் நாட்டின் முதல் குடிமக்களான இமானுவல் மேக்ரானும் அவரது மனைவி பிரிஜிட் மேக்ரானும்.
இத்தனைக்கும் இந்த கொரோனா காலகட்டத்தில் அவர்களை சந்திக்க எந்த நாட்டுத் தலைவரும் Elysee Palaceக்கு வரக்கூட இல்லை! அத்துடன், இந்த தொகை இதற்கு முன் ஜனாதிபதியாக இருந்தவர்கள் செலவிட்ட தொகையைவிட ஐந்து மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவல் பிரான்ஸ் மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. நாடு கொரோனாவின் தாக்கத்தால் பொருளாதார சிக்கலிலிருந்து விடுபட போராடிக்கொண்டிருக்கும்போது, வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளனர் மக்கள்.
நம்மை சேமிக்கச்சொன்னார்கள், அதிக வரியும் வசூலித்தார்கள், அவர்கள் ஜாலியாக கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் என்று ட்விட்டரில் தன் கோபத்தைக் கொட்டியிருக்கிறார் ஒருவர்.
கொரோனாவின் தாக்கம் எல்லோரையும் பாதிப்பதில்லை என்பது ஜனாதிபதி செலவு செய்வதைப் பார்த்தால் தெரிகிறது என்கிறார் மற்றொருவர்.
அவமானம், இது ஒன்றுமில்லாத ஏழைகளை அவமதிக்கும் ஒரு செயல், பொதுக்களின் பணத்தை வீணடிக்கும் செயல் என்று கொந்தளித்துள்ளார் மற்றொரு பிரெஞ்சுக் குடிமகன்.