20 ஆண்டுகளில் முதன்முறை... மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய இமானுவல் மேக்ரான்
பிரான்ஸ் ஜனாதிபதியாக மீண்டும் இமானுவல் மேக்ரான் பொதுமக்களால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரான்சின் 11வது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட இமானுவல் மேக்ரான் முதற்கட்ட தகவலின் அடிப்படையில் 58.2% வாக்குகளைப் பெற்று மீண்டும் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மேக்ரானை எதிர்த்து போட்டியிட்ட மரீன் லீ பென் 41.8% வாக்குகளைப் பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டில் மேக்ரான் 66.1% வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தார்.
தற்போது இமானுவல் மேக்ரான் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரெஞ்சு ஜனாதிபதி என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
இருப்பினும், ஒப்பீட்டளவில் சாதகமான வெற்றி சதவீதத்துடன் மேக்ரான் தமது இரண்டாவது ஐந்தாண்டு ஆட்சியை நோக்கிச் செல்லும் போது, இந்தத் தேர்தல், பிரான்சில் அதிகாரத்தை வெல்வதற்கு தீவிர வலதுசாரிகளுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் இதுவரை வந்திராத மிக நெருக்கமான சதவீதத்தை எட்டியுள்ளனர் என்பது எதிர்கால பிரான்ஸ் அரசியல் சவால் மிகுந்ததாக இருக்கும் என்றே அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
ரஷ்ய கைப்பாவை என குற்றஞ்சாட்டப்படும் தீவிர வலதுசாரி முகமான மரீன் லீ பென் வெற்றி பெற்றிருந்தால், அது 2016 தேர்தல் வெற்றி பிரித்தானியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேற காரணமாகவும், அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக தெரிவான சம்பவமும் உலக நாடுகளில் அதிர்வலைகளை ஏற்படுத்தியதற்கு ஒப்பான நிகழ்வாக இருந்திருக்கும் என்கிறார்கள்.
மேலும், மரீன் லீ பென் வெற்றி பெற்றிருந்தால், ஐரோப்பா கண்டம் மிகப்பெரிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கும் எனவும், பிரித்தானியா போன்று ஒருகட்டத்தில் பிரான்ஸ் நாடும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறியிருக்கும் எனவும், ஜேர்மனியில் ஏஞ்சலா மெர்க்கல் போன்ற துணிவு மிக்க தலைவர் ஆட்சியில் இல்லாததால், ஐரோப்பா கண்டம் சுக்கான் இல்லாத கப்பலாக தடுமாறியிருக்கும் என்கிறார்கள் அரசியல் நிபுணர்கள்.