கூடுதல் புலம்பெயர்ந்தோரை பணிக்கமர்த்தவேண்டும்: சுவிஸ் நிதி அமைச்சர் பரிந்துரை...
வெளிநாட்டவர்களை, குறிப்பாக ஐரோப்பிய ஒன்றிய மற்றும் ஐரோப்பிய தடையில்லா வர்த்தகக் கூட்டமைப்பு நாடுகளின் குடிமக்களை சுவிட்சர்லாந்தில் பணி செய்ய அனுமதிக்கும் தடையில்லா போக்குவரத்து நாட்டின் பொருளாதாரத்தின்மீது நேர்மறை தாக்கத்தை கொண்டுள்ளதாக சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகாரங்களுக்கான மாகாண செயலகம் நம்புகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் 1999ஆம் ஆண்டு செய்யப்பட்ட மக்களின் தடையில்லா போக்குவரத்து என்னும் ஒப்பந்தம், சுவிட்சர்லாந்தின் பல்வேறு பொருளாதார துறைகளில் நிலவும் தேவைகளுக்கேற்ப, காணப்படும் தொழிலாளர் தேவைகளை சந்திப்பதற்கு அவசியமானதாக திகழ்கிறது என, ஜூலை 7ஆம் திகதி, சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகாரங்களுக்கான மாகாண செயலகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டவர்களை பணிக்கமர்த்துதல், தொழிலாளர் சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டை ஈடுசெய்து, பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகிறது என்கிறது சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகாரங்களுக்கான மாகாண செயலகம்.
சுவிட்சர்லாந்தின் பொருளாதார விவகாரங்களுக்கான மாகாண செயலகத்தைப் போலவே, நிதியமைச்சரான Ueli Maurerம், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருந்தும் கூடுதல் புலம்பெயர்வோரை பணிக்கு அமர்த்தி காலியிடங்களை பூர்த்தி செய்யவேண்டும், குறிப்பாக, ஆராய்ச்சி மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறைகளில், என பரிந்துரைத்துள்ளார்.
கடந்த பல ஆண்டுகளாக சுவிஸ் பொருளாதாரத்துக்கு புலம்பெயர்ந்தோர் எந்த அளவுக்கு பயனுள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தியுள்ளன. 2022 நிலவரப்படி, சுவிட்சர்லாந்தில் வாழ்பவர்களில் நான்கு பேரில் ஒருவர் வெளிநாட்டவர் ஆவார்.
ஆக, சுவிஸ் பொருளாதாரத்தின் தேவைகளை சந்திப்பது, தொழிலாளர் சந்தையின் நெகிழ்வுத்தன்மைக்கு நேர்மறையான பங்களிப்பைச் செய்வது என பலவகைகளில் சுவிட்சர்லாந்தின் பொருளாதாரத்துக்கு புலம்பெயர்ந்தோர் உதவியாக இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது.