ஹொட்டல் சுவையில் அட்டகாசமான பரோட்டா சால்னா: இனி வீட்டிலேயே செய்யலாம்
பரோட்டா சால்னா என்பது பிரபல ஹொட்டல்களில் மட்டுமல்லாமல், ரோட்டுக்கடைகளிலும் பிரபலமான ஒரு உணவு ஆகும்.
இந்த சால்னா பரோட்டா, இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி என அணைத்து விதமான டிபன்களுக்கும் அட்டகாசமாக இருக்கும்.
வீட்டிலேயே இந்த சுவையான பரோட்டா சால்னா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- கடலை எண்ணெய்- 3 ஸ்பூன்
- தேங்காய்- 1 மூடி
- சோம்பு- 1 ஸ்பூன்
- கசகசா- 1 ஸ்பூன்
- முந்திரி- 10
- பிரிஞ்சி இலை- 2
- பட்டை- 2 துண்டு
- ஏலக்காய் - 4
- லவங்கம்- 4
- வெங்காயம்- 2
- இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன்
- பச்சைமிளகாய்- 4
- கருவேப்பிலை- 1 கொத்து
- புதினா- 1 கைப்பிடி
- கொத்தமல்லி- 1 கைப்பிடி
- தக்காளி- 2
- மஞ்சள் தூள்- ½ ஸ்பூன்
- காஷ்மீரி மிளகாய்த்தூள்- 1½ ஸ்பூன்
- மல்லி தூள்- 1 ஸ்பூன்
- கரம் மசாலா- 1 ஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- கடலை மாவு- 1½ ஸ்பூன்
- சிக்கன் மசாலா- 2 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், சோம்பு, கசகசா மற்றும் முந்திரி சேர்த்து தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில் கடலை எண்ணெய் சேர்த்து அதில் பட்டை, பிரிஞ்சி இலை, லவங்கம் மற்றும் ஏலக்காய் சேர்த்து வதக்கவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். தொடர்ந்து அதில் பச்சைமிளகாய், கருவேப்பிலை, புதினா மற்றும் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும். இதைத்தொடர்ந்து இதில் மஞ்சள் தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
பின் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி மசாலாவை நன்கு கொதிக்க விடவும். தொடர்ந்து இதில் அரைத்து வைத்த தேங்காய் பேஸ்ட் சேர்த்து சால்னாவிற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.
அடுத்து ஒரு பௌலில் கடலை மாவு சேர்த்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி கரைத்து கொதிக்கின்ற சால்னாவில் ஊற்றி 15 நிமிடம் மூடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
இறுதியாக, இதில் சிக்கன் மசாலா சேர்த்து 5 நிமிடம் கொதித்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஹொட்டல் சுவையில் பரோட்டா சால்னா தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |