230 ஓட்டங்கள் தான் இலக்கு..ஆனாலும் இங்கிலாந்து வீரர்களின் ஸ்டம்புகளை தெறிக்கவிட்ட இந்திய பவுலர்கள்
இந்திய அணி நிர்ணயித்த 230 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
லக்னோவில் நடந்து வரும் உலகக்கோப்பைப் போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.
முதலில் களமிறங்கிய இந்திய அணி 40 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. குறிப்பாக கோலி ரன் எடுக்காமல் அவுட் ஆனது பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.
ஆனால், கே.எல்.ராகுல் கேப்டன் ரோகித்துடன் இணைந்து சரிவில் இருந்து மீட்டர். எனினும் அவர் 39 ஓட்டங்களில் வெளியேறினார். அதன் பின்னர் அரைசதம் விளாசியிருந்த ரோகித் சர்மா 87 ஓட்டங்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
இதனால் இந்திய அணி 200 ஓட்டங்களை எட்டுமா என்ற கேள்வி எழுந்தது. அப்போது களமிறங்கிய சூரியகுமார் யாதவ் அதிரடியாக 49 ஓட்டங்கள் எடுத்தார். பும்ரா 16 ஓட்டங்களும், குல்தீப் 9 ஓட்டங்களும் எடுக்க இந்திய அணி 229 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்தின் வில்லி 3 விக்கெட்டுகளும், வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
எளிய இலக்கு என களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு 5வது ஓவரில் பும்ரா அதிர்ச்சி கொடுத்தார். அவரது ஓவரில் தாவீத் மலான் (16) போல்டு ஆனார்.
அதனைத் தொடர்ந்து ஜோ ரூட் LBW முறையில் பும்ரா ஓவரில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஸ்டோக்ஸ் ரன் எடுக்காமல் ஷமி ஓவரில் கிளீன் போல்டு ஆனார்.
மறுபுறம் தடுமாறிக் கொண்டிருந்த பேர்ஸ்டோவின் ஸ்டம்பை ஷமி தெறிக்க விட்டார். இதனால் இங்கிலாந்து அணி 39 ஓட்டங்களுக்கு 4 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. மொயீன் அலி மற்றும் ஜோஸ் பட்லர் அணியை மீட்க போராடி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |