பாகிஸ்தானை பந்தாடி தொடரைக் கைப்பற்றிய பட்லர் படை
பாகிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இங்கிலாந்து அணி முழுமையாக கைப்பற்றியது.
இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 4வது மற்றும் கடைசி டி20 போட்டி லண்டனின் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.
முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் அணி நல்ல தொடக்கம் தந்தது. ஆனால் பாபர் அசாம் (36), ரிஸ்வான் (23) விக்கெட்டுக்குப் பிறகு சரியத் தொடங்கியது.
பஹர் ஜமானை 9 ஓட்டங்களில் மொயீன் அலி வெளியேற்ற, ஷதாப் கான் ஓட்டங்கள் எடுக்காமல் ரஷீத் பந்துவீச்சில் அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அஸாம் கானும் டக்அவுட் ஆனார்.
Hands just don't come any safer ? @CJordan | #ENGvPAK pic.twitter.com/GoMKn94o7b
— England Cricket (@englandcricket) May 30, 2024
அதிரடியில் மிரட்டிய உஸ்மான் கான் 21 பந்தில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் குவித்தார். கடைசி கட்டத்தில் இஃப்திகார் அகமது 21 (18) ஓட்டங்களும், நசீம் ஷா 16 (18) ஓட்டங்களும் எடுக்க பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் 157 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அடில் ரஷீத், லிவிங்ஸ்டன் மற்றும் மார்க் வுட் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
அதன் பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் பிலிப் சால்ட் அதிரடியாக 24 பந்துகளில் 45 ஓட்டங்கள் குவித்து வெளியேறினார். அடுத்து வந்த வில் ஜேக்ஸ் நிதானமாக ஆட, ஜோஸ் பட்லர் 21 பந்துகளில் 39 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
ஜேக்ஸ் 20 ஓட்டங்களில் ராஃப் பந்துவீச்சில் போல்டு ஆனார். எனினும் பேர்ஸ்டோவ் 16 பந்துகளில் 28 ஓட்டங்களும், புரூக் 17 ஓட்டங்களும் எடுக்க, இங்கிலாந்து அணி 15.3 ஓவரிலேயே 158 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இங்கிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. மழை காரணமாக முதல் மற்றும் 3வது டி20 போட்டிகள் கைவிடப்பட்டது. அடில் ரஷீத் ஆட்டநாயகன் விருதையும், ஜோஸ் பட்லர் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.
Right out the middle of the bat ?#EnglandCricket | #ENGvPAK pic.twitter.com/Tvldxd3btx
— England Cricket (@englandcricket) May 30, 2024
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |