11 ஆண்டுகளுக்கு முன்பு சமையல்கார பெண்ணின் பேத்திக்கு சொகுசு பங்களாவை எழுதி வைத்த என்ஜினியர்.., நெகிழ்ச்சி சம்பவம்
அளவற்ற பாசத்தின் காரணமாக தனது வீட்டில் வேலை செய்த சமையல்கார பெண்ணின் பேத்திக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு என்ஜினியர் ஒருவர் சொகுசு பங்களாவை எழுதி வைத்துள்ளார்.
நெகிழ்ச்சி செயல்
பொதுவாகவே ஒருவர் இறப்பதற்கு முன்பு தனது பெயரில் உள்ள சொத்துக்களை உறவினர்கள் பெயரிலோ, ரத்த சொந்தத்தின் மீதோ எழுதி வைப்பார்கள். ஆனால், இங்கு ஒருவர் தனது வீட்டில் வேலை செய்த பெண்ணின் பேத்திக்கு சொத்துக்களை எழுதி வைத்துள்ளார்.
இந்திய மாநிலமான குஜராத், அகமதாபாத்தை சேர்ந்த என்ஜினியரான குஸ்டாத் போர்ஜோர்ஜி என்பவர் டாடா நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி குழந்தை இல்லாமல் இருந்தது. இவரது மனைவி கடந்த 2001-ம் ஆண்டில் உயிரிழந்தார்.
இவரது வீட்டில் சமையல் வேலைக்காக பெண் ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அவருடன் இருந்த அவரது பேத்தி அமிஷா மக்வானா மீது குஸ்டாத்திற்கு பிணைப்பு ஏற்பட்டு கல்வி செலவையும் ஏற்றுக் கொண்டார்.
பின்னர், 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குஸ்டாத் உயிரிழந்தார். அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு, அகமதாபாத்தின் ஷாஹிபாக் நகரில் உள்ள தனது 159 சதுர யார்டு சொகுசு பங்களாவை 13 வயது அமிஷா மக்வானா மீது உயிலாக எழுதி வைத்தார்.
அமிஷா மக்வானா மேஜர் ஆனதும் அந்த சொத்து அவருக்கு கிடைக்கும்படி இருந்தது. இதையடுத்து கடந்த 2023-ம் ஆண்டில் வழக்கறிஞர் அடில் சயீத் மூலம் உயில் மீது உரிமை கோரி அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் அமிஷா மனுதாக்கல் செய்தார்.
இந்த மனுவில், யாருக்காவது ஆட்சேபனைகள் இருக்கிறதா என்று நீதிமன்றம் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
பின்னர், பொறியாளரின் சொந்த சகோதரர் அமிஷாவுக்கு ஆதரவாக ஒரு ஆட்சேபனையில்லாச் சான்றிதழைச் சமர்ப்பித்தார். இதன்படி கடந்த 2-ம் திகதி 2025 அன்று அமிஷா மக்வானாவுக்கு சொத்து வழங்கப்பட்டது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |