இங்கிலாந்து அணியில் கொரோனா... அந்தரத்தில் ஆஷஸ் டெஸ்ட்!
இங்கிலாந்து வீரர்கள் மற்றும் பயிற்சி ஊழியர்கள் RT-PCR பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், ஆஷஸ் தொடர் தொடர்ந்து நடக்குமா என்பது விடை தெரியா கேள்வியாகியுள்ளது.
திங்கட்கிழமை மெர்போர்னில் உள்ள இங்கிலாந்து அணியில் இரண்டு பயிற்சி ஊழியர்களுக்கும் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இருவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
மீதமிருந்த பயிற்சி ஊழியர்கள் மற்றும் வீரர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனையில், யாருக்கும் தொற்று பாதிப்பு இல்லை என தெரியவந்ததை அடுத்து, திட்டமிட்ட படி இரண்டாவது போட்டி நடைபெற்றது.
தொற்று பாதிப்பு இல்லை என உறுதியான பின் இங்கிலாந்து வீரர்கள் ஆடுகளத்திற்கு வந்ததால், 3வது டெஸ்டின் 2வது நாள் ஆட்டம் தொடங்க 30 நிமிடங்கள் தாமதமானது.
எனினும், 3வது நாள் ஆட்டத்தில் விளையாட இங்கிலாந்து அணியின் தொற்று பாதிப்பு இல்லை என்ற RT-PCR பரிசோதனை முடிவை வழங்க வேண்டும்.
RT-PCR பரிசோதனை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணியினர், அதன் முடிவுக்காக காத்திருக்கின்றனர். செவ்வாய் கிழமை காலை தான் அவர்களுக்கு RT-PCR முடிவு கிடைக்கும் என கூறப்படுகிறது.
ஐசிசி விதிகளின் படி, நடுவர் அனுமதியுடன் கொரோனா பாதிப்பால் விலகிய வீரர்களுக்கு பதிலாக அணிகள் மாற்ற வீரர்களை சேர்த்துக்கொள்ளலாம்.
ஒருவேளை இங்கிலாந்து அணியில் RT-PCR பரிசோதனையில் தொற்று உறுதியானால், போட்டி எவ்வாறு தொடரும் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என இங்கிலாந்து அணி செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
அதேபோல், ஒருவேளை அணியால் யாருக்காவது தொற்று உறுதியானால், வீரர்கள் நெருங்கிய தொடர்புகளாக கருதப்படுவார்களா மற்றும் தனிமைப்படுத்துப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.