டி20யில் 304 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து! 141 ஓட்டங்கள் விளாசிய வீரர்..அதிர்ந்த கிரிக்கெட் உலகம்
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டியில் இங்கிலாந்து அணி 304 ஓட்டங்கள் குவித்து, 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
வாணவேடிக்கை
இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி மான்செஸ்டரில் நடந்தது.
முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில் ஜோஸ் பட்லர் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் வாணவேடிக்கை காட்டினர்.
அதிரடி அரைசதம் விளாசிய ஜோஸ் பட்லர் 30 பந்துகளில் 7 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 83 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பிலிப் சால்ட் சதம்
இந்த கூட்டணி முதல் விக்கெட்டுக்கு 47 பந்துகளில் 126 ஓட்டங்கள் சேர்த்தது. பிலிப் சால்ட் (Philip Salt) 39 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்தார்.
சிக்ஸர் பவுண்டரிகள் அவர் ஒருபுறம் பறக்கவிட, பெத்தேல் 26 (14) ஓட்டங்களில் வெளியேறினார்.
பின்னர் வந்த ஹாரி புரூக் அதிரடி காட்ட இங்கிலாந்து 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 304 ஓட்டங்கள் குவித்தது.
இதன்மூலம் Full member அணிக்கு எதிராக 300 ஓட்டங்கள் அடித்த முதல் அணி எனும் வரலாற்று சாதனை படைத்ததுடன், டி20யில் தங்களது அதிகபட்ச ஸ்கோரையும் இங்கிலாந்து பதிவு செய்தது.
மேலும், ஒட்டுமொத்த அரங்கில் 300 ஓட்டங்கள் குவித்த மூன்றாவது அணி இங்கிலாந்து ஆகும். இதற்கு முன் ஜிம்பாப்பே 344 ஓட்டங்களும், நேபாளம் 314 ஓட்டங்களும் குவித்திருந்தன.
இமாலய வெற்றி
பிலிப் சால்ட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 141 ஓட்டங்கள் விளாசினார். இதில் 8 சிக்ஸர், 15 பவுண்டரிகள் அடங்கும். ஹாரி புரூக் 21 பந்துகளில் 41 ஓட்டங்கள் எடுத்தார்.
பின்னர் ஆடிய தென் ஆப்பிரிக்கா 158 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆக, இங்கிலாந்து 146 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
அதிகபட்சமாக மார்க்ரம் 41 (20) ஓட்டங்களும், போர்டுன் 32 (16) ஓட்டங்களும் எடுத்தனர். ஆர்ச்சர் 3 விக்கெட்டுகளும், சாம் கர்ரன், டாவ்சன் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |