இங்கிலாந்து அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதம்.. 5 புள்ளிகள் பறிப்பு! ஐசிசி அதிரடி
பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நிபந்தனைகளின் பிரிவு 16.11.2-ன் படி, ஒரு அணி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் குறைவாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு புள்ளி குறைக்கப்படும்.
எடுத்துக்காட்டிற்கு, 50 ஓவர்கள் வீச நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் அணி 46 ஓவர்கள் மட்டுமே வீசியிருந்தால், ஒவ்வொரு ஓவருக்கு தலா ஒரு புள்ளி என்ற கணக்கில் 4 புள்ளிகள் குறைக்கப்படும்.
அதுமட்டுமின்றி, ஐசிசி நடத்தை விதி 2.22-யின் படி, ஒரு அணி நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் குறைவாக வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும், அந்த அணி வீரர்களின் போட்டிக் கட்டணத்தில் 20% அபராதமாக விதிக்கப்படும்.
பிரிஸ்பேனில் நடந்த முதலாவது முதல் ஆஷஸ் டெஸ்டில் இங்கிலாந்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா வெற்றிப்பெற்றது.
இந்த ஆட்டத்தில் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பந்து வீசாமல் இங்கிலாந்து வீரர்கள் அதிகமான நேரம் எடுத்துக்கொண்டதாக நடுவர்கள் புகார் அளித்தனர்.
அதாவது நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுக்குள் இங்கிலாந்து அணி 5 ஓவர்கள் குறைவாக வீசியுள்ளனர்.
இதையடுத்து, இங்கிலாந்து அணிக்குப் போட்டி ஊதியத்தில் இருந்து 100 சதவீதம் அபராதமாக ஐசிசி விதித்துள்ளது. மேலும், 5 ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளையும் பறித்துள்ளது.
ஐசிசி நடத்தை விதியை மீறியதற்காக ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட்-க்கு அவரது போட்டி கட்டணத்தில் 15% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.