மகளிர் உலகக்கோப்பையில் நடந்த விநோத சம்பவம்
மகளிர் உலகக்கோப்பை போட்டி ஒன்றில் நடைபெற்ற விநோத சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நியூசிலாந்தில் மகளிருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த போட்டி ஒன்றில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் 36.2 ஓவர்களில் 134 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. தொடர்ந்து பேட் செய்த இங்கிலாந்து அணி 31.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தாலும் பவுலிங்கின் போது இந்திய வீராங்கனை ஜுலான் கோஸ்வாமி வீசிய பந்து ஒன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
ஜூலான் வீசிய ஒரு ஓவரில் பந்தை இங்கிலாந்து வீராங்கனை நடாலியே தடுப்பாட்டம் ஆட முயன்றார். பந்து பேட்டின் உள்பகுதியில் பட்டு ஸ்டம்பிற்குள் நுழைந்தது. இதனால் அனைவரும் அவுட் என நினைத்த நிலையில் எதிரணி வீராங்கனையும் நடையை கட்டினார். ஆனால் ஸ்டம்பின் மேல் இருந்த பெயில் கீழே விழவில்லை. அப்படி இந்த விக்கெட் வீழ்ந்திருந்தால் நிச்சயம் இந்தியா இப்போட்டியில் வெற்றி பெற்றிருக்கலாம்.