ஐபிஎல் தொடர் இந்த மாதங்களில் நடந்தால் எங்கள் நாட்டு வீரர்கள் வரமாட்டர்கள்! உறுதியாக தெரிவித்த கிரிக்கெட் போர்டு
இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் நடைபெறுவது குறித்து தகவல் வெளியாகி வரும் நிலையில், அது குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் வரும் செப்டம்பர் அக்டோபர் அல்லது நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
இது குறித்து இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் நிர்வாக இயக்குனரான ஆஷ்லே கைல்ஸ் கூறுகையில், பாதியில் நின்று போன ஐபிஎல் போட்டிகள் எங்கே எப்போது நடக்கும் என்று யாருக்கும் எதுவும் தெரியாது.
ஆனால் அப்போட்டிகளை, செப்டம்பர் மாத இறுதியிலும் மற்றும் நவம்பர் மாத இடையிலும் நடத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஒருவேளை ஐபிஎல் போட்டிகள் இந்த காலப்பகுதியல் நடைபெற்றால் இங்கிலாந்து வீரர்கள் யாரும் அத்தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள்.
ஏனெனில் அப்போது இங்கிலாந்து வீரர்கள் அனைவரும் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். நாங்களும் எங்கள் வீரர்கள் இங்கிலாந்து அணிக்காக விளையாடுவதையே விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து அணி இந்த காலக்கட்டத்தில்,வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகளுக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. அதற்குப் பிறகு டி20 கிரிக்கெட் உலகக் கோப்பையில் பங்கு பெறும் அந்த அணி, அதை முடித்துவிட்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.