இங்கிலாந்தில் முதல் பலி வாங்கிய லஸ்ஸா காய்ச்சல்... ஒரே குடும்பத்தில் மூவர் கண்காணிப்பில்
இங்கிலாந்தின் பெட்ஃபோர்ட்ஷையரில் ஒருவர் லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த காய்ச்சலால் இங்கிலாந்தில் இறக்கும் முதல் நபர் இவர் என இங்கிலாந்தின் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
மேற்கு ஆபிரிக்காவில் இருந்து திரும்பிய குடும்பம் ஒன்று லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட, தற்போது அந்த குடும்பத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளதாகவே தெரிய வந்துள்ளது.
இதுவரை பிரித்தானியாவில் 10 பேர்களுக்கு மட்டுமே லஸ்ஸா காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2009ம் ஆண்டுக்கு பின்னர் குறித்த நோய் பாதிப்புக்கு இலக்காகும் முதல் நபர்கள் இவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.
பொதுவாகவே லஸ்ஸா தொற்றானது பெருந்தொற்று பட்டியலில் இடம்பெற்றுள்ள வைரஸ் என்றே கூறப்படுகிறது. மேலும் பாதிக்கப்படும் 80% நோயாளிகளுக்கும் அறிகுறிகள் எதுவும் தென்படாது என்பதுடன், பாதிப்புக்கு இலக்காகும் நபர்களில் 1% பேர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைய வாய்ப்புள்ளதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தற்போது லஸ்ஸா காய்ச்சல் அடையாளம் காணப்பட்டுள்ள அந்த குடும்பம் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணிக்க முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், லஸ்ஸா தொற்றால் பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் என்பது மிக மிக குறைவு என்றே நிபுணர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது. லாசா காய்ச்சலானது லைபீரியா, கினியா உட்பட ஆப்பிரிக்காவின் மேற்கு கடற்கரையில் உள்ள பல நாடுகளிலும் நைஜீரியாவிலும் முடிவுக்கு வந்துள்ளது.
லஸ்ஸா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட பெண்களில் பலருக்கு அதிக உதிரப்போக்கு காணப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் லஸ்ஸா காய்ச்சல் அடையாளம் காணப்பட்ட மூவரில் ஒருவர் லண்டனில் உள்ள மருத்துவமனைக்கு சிறப்பு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளார், ஒருவர் முழுமையாக குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.