IPLலில் வீரர்கள் கலந்து கொள்ள தடை விதியுங்கள்: இங்கிலாந்து பயிற்சியாளர் பரபரப்பு பேச்சு
இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்த நினைத்தால் இங்கிலாந்து அணி வீரர்களை ஐபிஎல் போன்ற டி 20 போட்டிகளில் கலந்து கொள்ளவதற்கு தடை விதியுங்கள் என மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவிற்கு எதிராக 4-0 என்ற மோசமான நிலையில் இங்கிலாந்து அணி ஆஷஸ் டெஸ்ட் தொடரை இழந்ததை தொடர்ந்து, இங்கிலாந்து அணி நிர்வாகம் கடுமையான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர், பேட்டிங் பயிற்சியாளர் அணியின் நிர்வாக இயக்குனர் என அனைவரும் பதவி விலகினார்.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் இந்த மோசமான தோல்விக்கு கவுண்டி கிரிக்கெட் காரணம் இல்லை எனவும், இங்கிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட்டின் தரத்தை உயர்த்த நினைத்தால் வீரர்களை ஐபிஎல் போன்ற டி 20 போட்டிகளில் பங்கேற்பதை தடை செய்ய வேண்டும் என இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.
மேலும் இங்கிலாந்து வீரர்கள் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்பதற்கு முன்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்றதே தோல்விக்கு காரணம் எனவும், கவுண்டி கிரிக்கெட் இங்கிலாந்திற்கு நல்ல, திறமையான சர்வதேச வீரர்களை தந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் டெஸ்ட் தோல்விக்கு கவுண்டி கிரிக்கெட் மீது பழி போடுவதை விட்டுவிட்டு, உண்மையான காரணங்களை கண்டறிந்து சரி செய்யுங்கள் என கவுண்டி கிரிக்கெட்டின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.