சிக்ஸர் மழை பொழிந்த இருவர்! வாணவேடிக்கை காட்டிய வீரர்களால் மிரட்டல் வெற்றி
இங்கிலாந்தின் டி20 பிளாஸ்ட் தொடரில் நாட்டிங்காம்ஷைர் அணி 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வார்விக்க்ஷைர் அணியை வீழ்த்தியது.
ருத்ர தாண்டவமாடிய மன்ரோ
பர்மிங்காமின் எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடந்த போட்டியில், முதலில் களமிறங்கிய நாட்டிங்காம்ஷைர் அணியில் ஹேலஸ் 1 ரன்னில் வெளியேறினார்.
அதன் பின்னர் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜோ கிளார்க் மற்றும் காலின் மன்ரோ ஜோடி எதிரணியின் பந்துகளை சிதறடித்தது.
சிக்ஸர் மழை பொழிந்த இருவரும் 122 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப்பில் எடுத்தனர். மன்ரோ 43 பந்துகளில் 9 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 87 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
214 ஓட்டங்கள் குவிப்பு
அடுத்து களமிறங்கிய டாம் மூரிஸ் 17 ஓட்டங்களில் வெளியேற, மறுமுனையில் ஜோ கிளார்க் ஆட்டமிழக்காமல் 89 (53) ஓட்டங்கள் எடுத்து களத்தில் நின்றார்.
அவரது ஸ்கோரில் 6 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகள் அடங்கும். இதன்மூலம் நாட்டிங்காம்ஷைர் அணி 214 ஓட்டங்கள் குவித்தது.
ஹென்றி ப்ரூக்ஸ் 2 விக்கெட்டுகளும், மொயீன் அலி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். தனியாளாய் போராடிய சாம் ஹைன் அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வார்விக்க்ஷைர் அணி, தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் சாம் ஹைன் அதிரடியாக ஓட்டங்கள் எடுத்தார்.
ஆனால், அவருக்கு பார்ட்னர்ஷிப் கொடுக்க வார்விக்க்ஷைர் வீரர்கள் தவறிவிட்டனர். இதனால் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியை தழுவியது.
வார்விக்க்ஷைர் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 203 ஓட்டங்கள் எடுத்தது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் வெற்றிக்காக போராடிய சாம் ஹைன் 52 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 97 ஓட்டங்கள் குவித்தார்.
நாட்டிங்காம்ஷைர் தரப்பில் ஷஹீன் ஷா அப்ரிடி மற்றும் ஜேக் பால் தலா 3 விக்கெட்டுகளும், கெல்வின் ஹாரிசன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.