கடைசிவரை போராடி 121 ரன் விளாசிய இலங்கை வீரர்: ஒருநாள் தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து அணி
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
358 ஓட்டங்கள் இலக்கு
இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கொழும்பில் நடந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 357 ஓட்டங்கள் குவித்தது. அணித்தலைவர் ஹாரி ப்ரூக் (Harry Brook) 66 பந்துகளில் 136 ஓட்டங்களும் (9 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகள்), ஜோ ரூட் 111 (108) ஓட்டங்களும் விளாசினர்.
பின்னர் களமிறங்கிய இலங்கை அணியில் மிஷாரா 22 ஓட்டங்களிலும், குசால் மெண்டிஸ் 20 ஓட்டங்களிலும் ஆட்டமிழக்க, பதும் நிசங்கா 25 பந்துகளில் 50 ஓட்டங்கள் விளாசினார்.
பவன் ரத்னயாகே அபாரம்
அதன் பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, பவன் ரத்னயாகே (Pavan Rathnayake) தனியாளாக போராடினார்.
அவரது பொறுப்பான ஆட்டத்தின் மூலம் இலங்கை அணி வெற்றியை நோக்கி பயணித்த போதிலும், சதம் விளாசிய பவன் ரத்னயாகே கடைசி விக்கெட்டாக ஆட்டமிழக்க இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது.
பவன் ரத்னயாகே 115 பந்துகளில் ஒரு சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் 121 ஓட்டங்கள் எடுத்தார். ஓவர்டன், டாவ்சன், ஜேக்ஸ் மற்றும் ரஷீத் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இங்கிலாந்து அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹாரி ப்ரூக் ஆட்டநாயகன் விருதையும், ஜோ ரூட் தொடர் நாயகன் விருதையும் பெற்றனர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |