மூன்றாவது டி20 போட்டி..இங்கிலாந்து அணி திரில் வெற்றி: கோப்பையை கைப்பற்றியது இந்தியா!
இந்தியாவிற்கு எதிரான மூன்றாவது டி-20 போட்டியில் இங்கிலாந்து அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி இருக்கும் நிலையில், இன்று டிரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்ஹாம் மைதானத்தில் வைத்து மூன்றாவது டி-20 போட்டிகள் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
இதையடுத்து முதல் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 215 ஓட்டங்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியில் மாலன் அதிகபட்சமாக 39 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்சர்களுடன் 77 ஓட்டங்கள் சேர்த்தார்.
இதனைத் தொடர்ந்து கடினமான இலக்குடன் இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது.
தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் சர்மா மற்றும் பண்ட் ஆகியோரும் அதனைத் தொடர்ந்து வந்த விராட் கோலியும் சொற்ப ஓட்டங்களில் வெளியேற ஆட்டம் இங்கிலாந்து அணியின் பக்கம் திரும்பியது.
இருப்பினும் மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய இந்திய அணி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ், இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் வீசிய பந்தை நாலாபுறமும் சிதறடித்தார்.
55 பந்துகளை எதிர்கொண்டு சூர்யகுமார் யாதவ் 14 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் என விளாசி 117 ஓட்டங்கள் குவித்து, இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்து சென்றார்.
ஆனால் மொயின் அலி வீசிய 18 ஓவரின் 5 வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்ததை தொடர்ந்து, இந்திய அணியின் வெற்றி மீண்டும் தட்டிப் பறிக்கப்பட்டது.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியால் 9 விக்கெட்டுகளை இழந்து வெறும் 198 ஓட்டங்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தனது முதல் வெற்றியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பதிவு செய்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: சீறிப்பாயும் சிங்களச் சுனாமி! விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து
இந்த போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ரீஸ் டோப்லியும், தொடர் நாயகனாக இந்திய அணியின் புவனேஷ்வர் குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.