நாங்கள் சோர்ந்துபோகும் நேரத்தில் நீங்கள் எங்களை உற்சாகப்படுத்துகிறீர்கள்... கனேடிய மருத்துவ உதவியாளர்களை நெகிழவைத்துள்ள வெளிநாட்டவர்
கொரோனா பரவலின்போது முன்னணியில் நின்று கொரோனாவுடன் போராடுபவர்கள் மருத்துவர்கள் மட்டுமல்ல... பல்வேறு ஊழியர்கள் கொரோனா போராட்டத்தில் பங்கேற்றுள்ளார்கள்.
அவர்களில் Personal Support Workers என்னும் மருத்துவ உதவியாளர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் மருத்துவர்களோ, செவிலியர்களோ அல்ல. நோயாளிகளை, முதியோர்களை, காயம்பட்டவர்களை கூட இருந்து குளிப்பாட்டுவது முதல் கழிவறைக்கு அழைத்துச் செல்வது வரை பல்வேறு பணிகளைச் செய்பவர்கள்.
அவர்களுக்கென்று ஒழுங்குமுறை அமைப்புகள் கூட சரியாக இல்லை. இப்படிப்பட்ட சூழலில், கொரோனா பரவலின் நேரத்திலும் நோயாளிகளை முழு நேரமும் கவனித்துக்கொள்கிறார்கள் இந்த மருத்துவ உதவியாளர்கள்.
அவர்களையும் தேடிச்சென்று உணவளித்து மகிழ்வித்து மகிழ்கிறார் வெளிநாட்டவர் ஒருவர்.
அவரது பெயர் Mohamad Fakih... லெபனான் கனேடியரான Mohamad Fakih, கோழிக்கறியும் சோறுமாக சமைத்து, தினமும் இப்படிப்பட்ட மருத்துவ உதவியாளர்களுக்கு வழங்கி வருகிறார்.
Paramount Middle Eastern Kitchen என்னும் உணவகத்தை நடத்தி வரும் Mohamad Fakih, இப்போது நாளொன்றிற்கு முதியோர் இல்லம் போன்றவற்றில் பணியாற்றும் 6,000 மருத்துவ உதவியாளர்களுக்கு, உணவு தயாரித்து இலவசமாக வழங்கி வருகிறார்.
இப்போது 6,000 பேருக்குதான் உணவு கொடுக்கிறோம், இதை 15,000ஆக உயர்த்த ஆசை என்கிறார் ரொரன்றோவில் வாழும் அந்த வள்ளல்.
தங்களுக்கு இலவச உணவு வழங்க வந்துள்ள தன்னார்வலர்களை புன்னகையுடன் வரவேற்கும் Vonetia Reid என்ற மருத்துவ உதவியாளர், உங்களைப் பார்ப்பதில் மிகுந்த மகிழ்ச்சி, நீங்கள் எங்கள் இதயத்தை நெகிழச் செய்துவிட்டீர்கள், நாங்கள் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம் என்று கூறும்போது, முகக்கவசத்துக்கு பின்னாலிருக்கும் அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது.
அதேபோல், நாங்கள் சோர்ந்துபோகும் நேரத்தில் நீங்கள் எங்களை உற்சாகப்படுத்துகிறீர்கள் என்கிறார் Alisa Abdul Qadir என்னும் செவிலியர்.
அதற்கு பதிலளிக்கும் Mohamad Fakih, அவர் சொன்னதை மறுக்கிறார்... இல்லை, மருத்துவப் பணியாளர்களான நீங்கள்தான் எங்களுக்கு உதவுகிறீர்கள், உங்களுக்கு எங்கள் நன்றியைக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் உங்களுக்கு உணவளிக்கிறோம் என்கிறார் அவர்.
அதற்கு மேல் பேச Mohamad Fakihக்கு நேரமில்லை, அவர் அடுத்த முதியோர் இல்லத்தைத் தேடி விரைகிறார்...