முதல்முறையாக உலகக்கோப்பையை பெற்றுத் தந்த கேப்டன்..திடீர் ஓய்வு அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி!
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் இயான் மோர்கன் திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அயர்லாந்தை பூர்வீகமாக கொண்ட இயான் மோர்கன், இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி வந்தார். அவர் கேப்டனாக பொறுப்பேற்ற பின்னர், இங்கிலாந்து அணி அசுர வேகத்தில் வெற்றிகளை குவித்தது.
தற்போது 35 வயதாகும் மோர்கன், சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு 126 போட்டிகளில் கேப்டனாக இருந்து 76 வெற்றிகளை பெற்று தந்துள்ளார். குறிப்பாக, 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையை மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
இதன்மூலம், இங்கிலாந்து அணிக்கு உலகக் கோப்பையை பெற்றுத்தந்த முதல் கேப்டன் என்ற பெருமையை மோர்கன் பெற்றார். ஆனால் கடந்த சில போட்டிகளில் அவர் ஓட்டங்களை குவிக்க தடுமாறினார். இதனால் அவர் மீது பெரிய அளவில் விமர்சனங்கள் எழுந்தன.
PC: Twitter (@englandcricket)
இந்த நிலையில் அவர் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'மிகவும் கவனமாக ஆலோசித்த பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து உடனடியாக ஓய்வு பெறும் முடிவுக்கு வந்துள்ளேன். இந்த முடிவு எளிதானது அல்ல. ஆனால், விலகுவதற்கு இதுவே சரியான தருணம் என நம்புகிறேன்.
ஒரு வீரராகவும், கேப்டனாகவும் அணிக்கு செய்துள்ள சாதனைகளை நினைத்து பெருமைப்படுகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றாலும் தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் விளையாடுவேன்' என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பையில் மோர்கன் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரது இந்த முடிவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இயான் மோர்கன் 248 ஒருநாள் போட்டிகளில் 14 சதம், 47 அரைசதங்களுடன் 7701 ஓட்டங்களும், 115 டி20 போட்டிகளில் 2458 ஓட்டங்களும் எடுத்துள்ளார். 16 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ள அவர், 2 சதம் விளாசி 700 ஓட்டங்கள் எடுத்துள்ளார்.