இனி PF பணத்தை 90% வரை எடுக்கலாம், மாதத்தவணையில் பணம் ; விதிகளில் முக்கிய மாற்றங்கள்
epfo allow pf withdrawal in installments: பணியாளர்கள் ஓய்வு காலத்தில் பணத்தட்டுப்பாடு இல்லாமல் இருக்க, மாத ஊதியத்தில் குறிபிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு PF கணக்கில் சேமிக்கப்படுகிறது.
தற்போது இந்த PF கணக்கில் பணத்தை எடுத்துப்பதற்கான விதிமுறைகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
PF விதிகளில் முக்கிய மாற்றங்கள்
தற்போதுள்ள கட்டமைப்பின்படி, பகுதியளவு பணம் எடுக்கும்போது, தங்களின் தகுதியான வருங்கால வைப்பு நிதி இருப்பில் குறைந்தபட்சம் 25%-ஐத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும்.

இனி, குறைந்தபட்ச இருப்புத் தொகையை 25 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கும் திட்டத்திற்கு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த மாற்றத்தைத் தொடர்ந்து, உறுப்பினர்கள் தங்கள் மொத்த நிதியில் 90% வரை திரும்பப் பெற அனுமதிக்கப்படுவார்கள்.
அதே போல், வேலை இழந்த பிறகு பணத்தை திரும்பப் பெறுவதற்கான காத்திருப்புக் காலத்தை 12 மாதங்களிலிருந்து 2 மாதங்களாகக் குறைத்துள்ளது.
மேலும், PF பணத்தை எடுப்பதற்காக ஒரு முறைப்படுத்தப்பட்ட திரும்பப் பெறும் திட்டத்தை (SWP) அறிமுகப்படுத்தும் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, உறுப்பினர்கள் தாங்கள் சேமித்த வருங்கால வைப்பு நிதியை முழுத் தொகையையும் ஒரே நேரத்தில் எடுப்பதற்குப் பதிலாக, மாதாந்திர, காலாண்டு அல்லது அரையாண்டு என ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தவணைகளில் பெற்றுக்கொள்ள முடியும்.
கணக்கில் மீதமுள்ள தொகைக்கு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் விதிகளின்படி தொடர்ந்து முழு வட்டி கிடைக்கும்.
இந்த புதிய நடைமுறையின்படி, முதற்கட்டமாக 55 வயதுக்கு மேற்பட்ட சுமார் 6.32 லட்சம் உறுப்பினர்கள் நேரடியாகப் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
PF கொடுப்பனவுகளை பெறும்போது ஒரு உறுப்பினர் இறந்துவிட்டால், பரிந்துரைக்கப்பட்டவர் அல்லது அவரைச் சார்ந்திருப்பவர் நிலுவையில் உள்ள தொகையைத் திரும்பப் பெறலாம் அல்லது தவணைகளைத் தொடர்ந்து பெறலாம்.