இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த சிண்ட்ரெல்லா... பிரித்தானிய ஊடகங்கள் விமர்சனம்
இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கும் மோசமான குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீனுக்கும் உள்ள உறவை உலகுக்கு முதன்முறையாக தெரியப்படுத்திய இளம்பெண் ஒருவரை நினைவுகூர்கின்றன பிரித்தானிய ஊடகங்கள்.
இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த சிண்ட்ரெல்லா...
2014ஆம் ஆண்டு, அமெரிக்க அவுஸ்திரேலிய குடிமகளான விர்ஜினியா (Virginia Giuffre) என்னும் இளம்பெண், பிரித்தானிய இளவரசரான ஆண்ட்ரூவுக்காக, தன்னை அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவர் கடத்தி, அவருடன் உடல் ரீதியான உறவு கொள்ள வற்புறுத்தியதாக புகாரளிக்க, பிரித்தானிய ராஜகுடும்பம் அதிர்ந்தது.

பருவம் எய்தாத தன்னுடன் ஆண்ட்ரூ பலமுறை உடல் ரீதியான உறவு கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார் விர்ஜினியா.

விர்ஜினியாவின் இடுப்பில் ஆண்ட்ரூ கைபோட்டுக்கொண்டிருக்க, அருகில் எப்ஸ்டீனுடைய காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல் நிற்கும் புகைப்படம் வெளியான நிலையிலும், தனக்கு அது குறித்து எதுவும் தெரியாது, அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்றே கூறிவந்தார் ஆண்ட்ரூ.

2019ஆம் ஆண்டு, எப்ஸ்டீன் ஆண்ட்ரூ தொடர்பு குறித்த சில ஆவணங்கள் வெளியாக, உலகின் கவனம் ஆண்ட்ரூ பக்கம் திரும்பியது.
2021ஆம் ஆண்டு, ஆண்ட்ரூ மீது விர்ஜினியா முறைப்படி வழக்குத் தொடர, சமீபத்தில் அமெரிக்க நீதித்துறை எப்ஸ்டீன் குறித்த ஆவணங்களை வெளியிட, நேற்று ஆண்ட்ரூ கைது செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.
ஆக, விர்ஜினியா துவக்கி விட்ட பிரச்சினையால்தான் இன்று ஆண்ட்ரூ கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது என கூறும் பிரித்தானிய ஊடகங்கள், விர்ஜினியாவை, இளவரசர் ஆண்ட்ரூவைக் கவிழ்த்த சிண்ட்ரெல்லா என புகழ்ந்துள்ளன.

இந்நிலையில், ஆண்ட்ரூ கைது செய்யப்பட்ட விடயத்தைக் கேள்விப்பட்டதும், ஊடகவியலாளர் ஒருவர் நேரலையில் கண்ணீர் சிந்தினார்.
அவரிடம் எதற்காக அழுகிறீர்கள் என கேட்டபோது, எப்ஸ்டீனால் பாதிக்கப்பட்ட இளம்பெண்களை நினைத்து அழுகிறேன், ஆண்ட்ரூவால் பாதிக்கப்பட்ட விர்ஜினியாவை நினைத்து அழுகிறேன் என்றார் அவர்.
அவரைப்போலவே, பல ஊடகங்கள், ஆண்ட்ரூவின் கைது செய்தியைக் குறித்து எழுதும்போது, அவரால் பாதிக்கப்பட்ட, பல வருடங்களாக நீதிக்காக போராடிய விர்ஜினியா உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு ஆறுதலாக இருந்திருக்கும் என குறிப்பிட்டுள்ளன.
விடயம் என்னவென்றால், 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், விர்ஜினியா தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |