சென்னை சூப்பர் கிங்ஸை சம்பவம் செய்த இலங்கை வீரர்: உடைத்த இரகசியம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ரிவர்ஸ் ஸ்விங் வெற்றிக்கு கைகொடுத்ததாக, சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர் இஷான் மலிங்கா தெரிவித்தார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் வெற்றி
ஐபிஎல் 2026 தொடரின் நேற்றையப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் 194 ஓட்டங்கள் குவித்தது.

அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 59 ஓட்டங்களும், ஹெய்ன்ரிச் கிளாசென் 59 ஓட்டங்களும் விளாசினர். பின்னர் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11.4 ஓவர்களில் 113 ஓட்டங்கள் என வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், பிரேவிஸ் ஆட்டமிழக்க போட்டியின் தன்மை தலைகீழாக மாறியது. இலங்கையின் இஷான் மலிங்கா மறுபுறம் பந்துவீச்சில் கடுமையான நெருக்கடி கொடுத்தார். இதனால் CSK அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 184 ஓட்டங்களே எடுத்து தோல்வியுற்றது.
அதிகபட்சமாக மேத்யூ ஷார்ட் 34 ஓட்டங்களும், ஆயுஷ் மாத்ரே 30 ஓட்டங்களும் எடுத்தனர். இஷான் மலிங்கா 3 விக்கெட்டுகளும், நிதிஷ் குமார் 2 விக்கெட்டுகளும், பிரஃபுல் ஹிங்கே, ஷாகிப் மற்றும் ஷிவாங் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இஷான் மலிங்கா
வெற்றி குறித்து பேசிய இஷான் மலிங்கா கூறுகையில், "போட்டிக்கு முன்பு ஒரு பந்துவீச்சு அணியாக, எங்களிடம் ஒரு நல்ல திட்டம் இருந்தது. மேலும், ஐதராபாத் விக்கெட்டின் தன்மை எங்களுக்குத் தெரியும். 10 ஓவர்களுக்குப் பிறகு பந்து ரிவர்ஸ் ஸ்விங் ஆகும் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
இந்த மாதிரியான ஐதராபாத் விக்கெட்டில் எப்படி விளையாட வேண்டும் என்பதும் எங்களுக்குத் தெரியும், நாங்கள் அதை செயல்படுத்தினோம். பந்துவீச்சு குறியீட்டைப் பார்த்தே, நான் என்ன மாதிரியான பந்தை வீசப் போகிறேன் என்பதை முடிவு செய்வேன்.
எனக்கும் மற்ற பந்துவீச்சாளர்களுக்கும் ரிவர்ஸ் ஸ்விங் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், ஒரு சிறந்த விக்கெட் எடுக்கும் பந்துவீச்சாளர் ரிவர்ஸ் ஸ்விங்கை வீசினால், எங்களால் அதை செயல்படுத்த முடியும்; ஆனால் துடுப்பாட்ட வீரர்களால் முடியாது, அதை அடிக்க அவர்கள் சிரமப்படுவார்கள்" என்றார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |