எசெக்ஸ் வாகன விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு: 2 பேர் மீது கொலை வழக்குப்பதிவு
எசெக்ஸ் வாகன விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
12 வயது சிறுவன் உயிரிழப்பு
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 5.40 மணிக்கு பிரன்ட்வுட்டின் பில்கிரிம்ஸ் ஹேட்ச்(Pligrims Hatch) பகுதியில் உள்ள அஷ்வெல்ஸ் சாலையில்(Ashwells Road) 12 வயது சிறுவன் பாபி ப்ளூம்ஃபீல்டு(Bobby Bloomfield) மீது வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்துக்கு பிறகு உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி சிறுவன் பாபி ப்ளூம்ஃபீல்டு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 43 வயது வில்லியம் லன்னன்(William Lunnon) என்ற ஆணும், 15 வயது சிறுவன் ஒருவரும் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்ட காரணங்களுக்காக சிறுவன் பெயர் வெளியிடப்படவில்லை, கைது செய்யப்பட்டுள்ள இருவரும் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 4 பேர் கைது
சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கான நீதித் தேடலுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 65 வயது மற்றும் 54 வயதுடைய 2 ஆண்கள் மற்றும் 65 வயது மற்றும் 45 வயதுடைய 2 பெண்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ஆதரவு வழங்குவதும், இந்த சம்பவம் தொடர்பான முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவதே தங்களின் முதன்மை நோக்கம் என்று காவல் ஆய்வாளர் கிரெக் வூட் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விவரம் தெரிந்தவர்கள் முன்வந்து தகவல் கொடுக்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |