ஐரோப்பிய நாடுகளின் மோசமான நிலைக்கு இதுதான் காரணம்: பிரித்தானிய தடுப்பூசி நிறுவனர் வெளிப்படை
கொரோனா பரவல் மற்றும் அதிக இறப்பால் ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட காரணம் இது தான் என ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி நிறுவனர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி Pascal Soriot இது தொடர்பில் தெரிவிக்கையில், ஐரோப்பிய நாடுகள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியை விடுத்து பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளின் பின்னால் சென்றார்கள்.
பைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளை ஒப்பிடுகையில் ஆஸ்ட்ராசெனகா நீண்ட நாள் பாதுகாப்பை அளிக்கிறது என்பது பல கட்டங்களில் நிரூபிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செல்களை ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி மொத்தமாக சேதப்படுத்தி நீக்குகிறது.
இதனால் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியால் ஆழமான பாதுகாப்பு கிடைக்கிறது என்றார். மட்டுமின்றி, ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசிக்கு எதிராக தவறான பரப்புரைகளிலும் ஈடுபட்டு வந்தனர்.
பைசர் தடுப்பூசியையே அவர்கள் நம்பியதால், மில்லியன் கணக்கான டோஸ் தடுப்பூசிகளை வரவழைத்துக் கொண்டனர். ஆனால் தற்போது ஐரோப்பிய நாடுகளில் தொற்று விகிதங்கள் அதிகரித்து வருகின்றன,
மேலும் சில நாடுகளின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களின் புள்ளிவிவரங்கள் இங்கிலாந்தை விட மூன்று மடங்கு அதிகரித்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றின் பிடியில் இருந்து பிரித்தானியா வேகமாக விடுவித்துக் கொண்டுள்ளது ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் வெற்றி எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒருகட்டத்தில் பிரித்தானியாவிலும் கொரோனா பரவல் விகிதங்கள் அதிகரித்தே காணப்பட்டது. தற்போது ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் மிக மிக குறைவு என தெரிவித்துள்ளார் Pascal Soriot.
சுமார் 25 மில்லியன் பிரித்தானிய மக்கள் ஆஸ்ட்ராசெனகா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் வெறும் 67 மில்லியன் ஆஸ்ட்ராசெனகா டோஸ் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை பைசர் தடுப்பூசியானது 441 மில்லியன் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.