பிரான்ஸ் தலைநகரில் புதிய விதிமுறை அமுல்! மீறினால் அபராதம்
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில், வாகனங்களின் அதிகபட்ச வேக வரம்பு, மணிக்கு 30 கிலோமீட்டர் என்று குறைக்கப்பட்டுள்ளது.
பிரான்சில் இது ஒன்றும் புதிதல்ல. மணிக்கு 30 கிலோமீட்டர் எனும் இந்த குறைக்கப்பட்ட வேக வரம்பு, ஏற்கெனவே சில பிரெஞ்சு நகரங்களில் நடப்பில் உள்ளது. இனிமேல் அந்த வரம்பு, பாரிஸ் நகரம் முழுமைக்கும் பொருந்தும்.
முக்கிய சுற்றுச் சாலைகள், விரைவுச்சாலைகள் போன்றவை மட்டும், அதிலிருந்து விலக்குப் பெற்றுள்ளன.
வாகன எண்ணிக்கை, இரைச்சல், பருவநிலை மாற்றத்திக்கு வித்திடும் தூய்மைக்கேடு ஆகியவற்றைக் குறைப்பதற்காக, பாரிஸ் நகர மேயர் தெரிவித்த உறுதிமொழியின் ஓர் அங்கம் தான் இந்த புதிய விதிமுறை.
மேலும், நகரத்தில் விபத்துகளைக் குறைக்கும் முயற்சியாகவும், பாரிஸை பாதசாரிகளுக்கு ஏற்றதாக மாற்றுவதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை மீறினால் வாகன உரிமையாளர்களுக்கு குறைந்தபட்சம் 90 யூரோக்களுக்கு அபராதம் விதிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும் எனக் குறைகூறப்படுகிறது. மேலும், இதனால் வாடிக்கையாளர்களுக்கு அதிக நேரம் காத்திருக்க நேரிடும், வண்டிகளின் கட்டணம் உயரும் மற்றும் வியாபாரம் பாதிக்கும் என்று வணிக வாகன ஓட்டுனர்கள் கூறியுள்ளனர்.