எலான் மஸ்க்கின் X தளத்திற்கு 1 பில்லியன் டொலர் அபராதம் விதிக்க உள்ள ஐரோப்பிய ஒன்றியம் - என்ன காரணம்?
பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க், Tesla, Space X, Nueralink உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
X தளம்
கடந்த 2022 ஆம் ஆண்டு, பிரபல சமூக வலைத்தளமான டிவிட்டரை $44 பில்லியனுக்கு விலைக்கு வாங்கி, அதில் எக்ஸ் என பெயர் மாற்றினார்.
அதன் பின்னர், கட்டணம் செலுத்தி யார் வேண்டுமானாலும் ப்ளூடிக் பெரும் முறை, GROK என்னும் Chatbot என எக்ஸ் தளத்தில் பல்வேறு மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில் X தளத்தை, தன்னுடைய மற்றொரு நிறுவனமான xAI க்கு 33 பில்லியன் டொலருக்கு (இந்திய மதிப்பில் ரூ2.82 லட்சம் கோடி) விற்பதாக அறிவித்தார்.
1 பில்லியன் டொலர் அபராதம்
இந்நிலையில், எக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பில்லியன் டொலருக்கு அதிகமான தொகையை அபராதம் விதிக்க ஐரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோத உள்ளடக்கம் மற்றும் தவறான தகவல்களை எதிர்த்துப் போராட வடிவமைக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய சட்டத்தை மீறியதாக எக்ஸ் நிறுவனத்தின் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அபராதம் மட்டுமின்றி, எக்ஸ் தளத்தில் சில மாற்றங்களை செய்ய ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாட்டாளர்கள் உத்தரவிட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடக நிறுவனங்கள் தங்கள் தளங்களை தீவிரமாக கண்காணிப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட டிஜிட்டல் சேவைகள் சட்டத்தின் (DSA) கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
உலக பணக்காரர்கள் பட்டியலில், 420 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் முதலிடத்தில் உள்ள எலான் மஸ்க், சமீபத்தில் டிரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு முறையால், ஒரே நாளில் 11 பில்லியன் டொலர்களையும் இழந்துள்ளனர்.
இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் இந்த முடிவு, எலான் மஸ்க்கிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |