காபூல் மீட்பு நடவடிக்கை... அசுர வேகத்தில் முடித்துக் கொண்ட சுவிஸ் நிர்வாகம்
ஆப்கானிஸ்தாலில் தாலிபான்கள் விடுத்திருந்த காலக்கெடு முடிய சில நாட்களும் மணி நேரங்களும் எஞ்சியிருக்க, சுவிஸ் நிர்வாகம் அசுர வேகத்தில் மீட்பு நடவடிக்கைகளை முடித்துக் கொண்டுள்ளது.
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டிரம்புடன் தாலிபான்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில், விதிக்கப்பட்ட காலக்கெடுவானது ஆகத்து 31 உடன் முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து 387 பேர்களை மீட்டுக்கொண்டு வந்த சுவிஸ் நிர்வாகம், தங்கள் மீட்பு நடவடிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.
இருப்பினும் 15 சுவிஸ் குடிமக்கள் இன்னமும் ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ளதாகவும், அவர்களின் தனிப்பட்ட தேவைகளுக்காக அவர்கள் ஆப்கானிஸ்தானில் தங்கியுள்ளதாகவும் சுவிஸ் நிர்வாகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்கப்பட்டவர்களில் 200 பேர்கள் சுவிஸ் தூதரகத்தில் பணியாற்றிய ஆப்கன் நாட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் என தெரிய வந்துள்ளது.
இவர்களுக்கு உரிய முறைப்படி புகலிடம் அளிக்கப்படும் என சுவிஸ் நிர்வாகம் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. ஆகத்து 10ம் திகதி நேச நாடுகள் சிலவற்றுடன் சுவிஸ் பாதுகாப்பு அதிகாரிகள் கலந்தாலோசித்ததுடன், அமெரிக்க தரப்பில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற சுமார் 30 நாட்கள் எடுத்துக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பத்துக்கும் குறைவான நாட்களில் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை துப்பாக்கி முனையில் கைப்பற்றினர். இந்த நிலையில், காபூல் நகரில் செயல்பட்டுவரும் முக்கிய அலுவலகங்களை மூட சுவிஸ் நிர்வாகம் முடிவெடுத்தது.
ஆகத்து 15ம் திகதி பின்லாந்து பாதுகாப்பு நிறுவனம் ஒன்றின் உதவியுடன் ஜேர்மனி தூதரகத்திற்கு சுவிஸ் மக்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்து ஜேர்மன் ஊழியர்களுடன் இணைந்து அமெரிக்க தூதரகத்திற்கு ஹெலிகொப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதே நாள் மதியத்திற்கு மேல், அமெரிக்க சரக்கு விமானத்தில் சுவிஸ் மக்கள் கட்டார் நாட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். மட்டுமின்றி அதே நாளில் சுவிட்சர்லாந்தின் சிறப்பு ராணுவ அமைப்பு ஒன்றை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காபூல் நகருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்துள்ள நாட்களில் சுவிட்சர்லாந்துடன் தொடர்புடைய அனைத்து மக்களையும் காபூல் விமான நிலையம் வழியாக ஜேர்மன் ராணுவ விமானங்களில் மீட்கப்பட்டனர். காபூல் விமான நிலையத்திற்கு தொடர்புடைய மக்களை கொண்டு சேர்ப்பதே மிகப்பெரிய சவாலாக இருந்ததாக சுவிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகத்து 24ம் திகதி சூரிச்சில் கடைசி விமானம் தரையிறங்கியது, தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் இருந்து மீட்பு நடவடிக்கை மொத்தமும் முடித்துக் கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தங்க நேர்ந்த அந்த 15 சுவிஸ் குடிமக்களுடன், இஸ்லாமாபாதில் அமைந்துள்ள சுவிஸ் தூதரகம் வழியாக தொடர்பு கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.