சுவிட்சர்லாந்தில் இனி கோழிகளை இப்படித்தான் கொல்லவேண்டுமாம்... 2022இல் நிகழவிருக்கும் முக்கிய மாற்றங்கள்
இறைச்சிக்காக கோழிகளை எப்படிக் கொல்லவேண்டும் என்பதிலிருந்து கொரோனா விதிகள் வரை 2022இல் சுவிட்சர்லாந்தில் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன.
என்னென்ன முக்கியமான மாற்றங்கள் நிகழ இருக்கின்றன என்பதைப் பார்க்கலாம்...
கோழிகளை இறைச்சிக்காக கொல்லும் முறையில் மாற்றம்
கோழிகள், வான்கோழிகள் முதலானவற்றை இறைச்சிக்காக கொல்லும்போது பின்பற்றவேண்டிய சட்டங்கள் சில விரிவாக்கம் செய்யப்பட இருக்கின்றன.
அதன்படி, இறைச்சிக்காக கோழிகளைக் கொல்வதற்கு தற்போது பயன்படுத்தப்படும் வாயுக்களுக்கு பதிலாக இனி கார்பன்டை ஆக்சைடு பயன்படுத்தப்பட உள்ளது.
இயலாமை காப்பீட்டில் மாற்றம்
2022 ஜனவரி 1ஆம் திகதி முதல், இயலாமைக் காப்பீட்டில் (disability insurance) முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
மன நல பிரச்சினை உள்ளவர்களுக்கும் பணி செய்ய வாய்ப்புக் கிடைக்கச் செய்யும் நோக்கில் இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளன.
வாகனங்களில் கருப்புப் பெட்டிகள் அறிமுகம்
ஜூலை மாதம் 1ஆம் திகதி முதல், புதிய வகை பயணிகள் கார்கள் மற்றும் வேன்கள் முதலான சுவிஸ் வாகனங்களில், ஐக்கிய நாடுகள் நெறிமுறை ஒன்றின்படி கருப்புப் பெட்டிகள் இணைப்பது கட்டாயமாக்கப்படுகிறது.
மாகாணம் விட்டு மாகாணம் மாறும் Clavaleyres
Bern மாகாணத்திலிருந்த Clavaleyres, 2022 ஜனவரி 1 முதல் Fribourg மாகாணத்துடன் இணைக்கப்படுகிறது.
வெளிநாட்டுப் பொருட்கள் வாங்குவதிலிருந்த பிரச்சினைக்குத் தீர்வு
இணையம் வாயிலாக வெளிநாட்டுப் பொருட்கள் வாங்கும் சுவிஸ் மக்கள், குறைந்த விலையில் வெளிநாட்டுப் பொருட்கள் வாங்க முயலும்போது, சில தளங்கள் அவர்களை அதிக விலையுள்ள பொருட்கள் விற்கும் சுவிஸ் தளங்களுக்கு வழி நடத்திவிடுவதுண்டு.
ஜனவரி முதல் அப்படி நடக்காமல் தடுக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கொரோனா விதிகள் மற்றும் கொரோனா சான்றிதழ்
சுவிஸ் கொரோனா விதிகள் மற்றும் கொரோனா சான்றிதழ்கள் ஜனவரி 24ஆம் திகதியுடன் காலாவதியாக உள்ளன.
சுவிட்சர்லாந்தில் நிலவி வரும் கொரோனா சூழலைப் பார்க்கும்போது, ஜனவரிக்குப் பிறகும் கொரோனா விதிகள் நீட்டிக்கப்படலாம். ஒருவேளை கோடை துவங்கும் முன், இளவேனிற்காலத்தில் விதிகள் நெகிழ்த்தப்படலாம்.
பெட்ரோல் விலை அதிகரிக்க உள்ளது
பெட்ரோல், லீற்றருக்கு 5 சென்ட்கள் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மீன்கள் மற்றும் லாப்ஸ்டர்கள் குறித்து ஒரு விதி மாற்றம்
2022 ஜனவரி 1 முதல், மீன்கள் மற்றும் லாப்ஸ்டர்கள் கொல்லப்படுவதில் மாற்றங்களைக் கொண்டு வர உள்ளது சுவிஸ் பெடரல் உணவு பாதுகாப்பு மற்றும் கால்நடை அலுவலகம்.
குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகம் செய்யும் பேசல்
2022இல் குறைந்தபட்ச ஊதியத்தை அறிமுகம் செய்ய உள்ளது பேசல். வாக்காளர்கள் முடிவு செய்தபடி, அது 21 சுவிஸ் ஃப்ராங்குகளாக இருக்கும்.
சுவிஸ் பாஸ் நீட்டிப்பு
2022இல் சுவிஸ் பொதுப்போக்குவரத்து பயண அட்டையான சுவிஸ் பாஸ் சில முன்னேற்றங்களைக் காண உள்ளது.
தபால் செலவுகள்
சுவிட்சர்லாந்தில் கடிதங்கள் அனுப்புவது 2022 இறுதிவாக்கில் அதிக செலவு பிடிக்கும் விடயமாக ஆக உள்ளது. கடிதம் ஒன்றுக்கு 10 செண்ட்கள் வரை கட்டணம் அதிகரிக்க உள்ளது.
ஆனால், பார்சல்கள் அனுப்பும் கட்டணத்தில் மாற்றம் எதுவும் இல்லை.
மின்சார கட்டணம்
மின்சார கட்டணம் 2022இல் அதிகரிக்க உள்ளதாக பெடரல் மின் ஆணையம் தெரிவித்துள்ளது.