உக்ரைன் போரால் சுவிட்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்பட இருந்த ரஷ்யருக்கு அடித்த அதிர்ஷ்டம்
உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யர் ஒருவரை சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தும் முடிவில் எதிர்பாராத பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
St Petersburgஇல் அமைந்துள்ள பால்டிக் வங்கியின் இணை உரிமையாளர் Oleg Schigajew. சுமார் 50 மில்லியன் சுவிஸ் ஃப்ராங்குகள் மதிப்பிலான நிதி மோசடி செய்ததாக அவர் ரஷ்யாவில் தேடப்படும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார். பல ஆண்டுகளாக சுவிட்சர்லாந்தில் வாழும் அவரை ரஷ்யாவுக்கு நாடு கடத்த திட்டமிட்டிருந்தது சுவிட்சர்லாந்து.
ஆனால், தற்போது உக்ரைன் போர் காரணமாக அந்த வழக்கில் எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டுள்ளது.
அதாவது, உக்ரைன் ஊடுருவலைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 15ஆம் திகதி, ரஷ்யா தான் ஐரோப்பிய ஆணையத்திலிருந்து விலகுவதாக அறிவித்தது. ஆகவே, இனி ரஷ்யாவுக்கு சுவிட்சர்லாந்திலிருந்து யாரையும் நாடுகடத்துவது சட்டப்படி சாத்தியமில்லை (ரஷ்யாவிலிருந்து சுவிட்சர்லாந்துக்கும்தான்!).
எனவே, சுவிஸ் பெடரல் நீதித்துறை, Schigajewவை நாடுகடத்துவதற்கான நடவடிக்கைகளை நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், அதற்கு எவ்வித தடையுமில்லை என்றும் சுவிட்சர்லாந்து அறிவித்துவிட்டது.