தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.30 கோடி பேரம்; முன்னாள் துணை மேயர் மன்னன் கைது
தவெக ஆட்சியை கவிழ்க்க தன்னிடம் ரூ.30 கோடி வரை பேரம் பேசியதாக தவெக எம்எல்ஏ முஸ்தபா முன்னாள் துணை மேயர் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னன் கைது
தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தவெக அரசுக்கு எதிராக வாக்களிக்குமாறு அதிமுக நிர்வாகி மன்னன் தன்னை அணுகியதாக மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ முஸ்தபா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்னர் ரூ. 15 கோடியும், பின்னர் ரூ. 15 கோடியும் வழங்க மன்னன் முன்வந்ததாக முஸ்தபா தன் புகாரில் தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் மன்னன் மீது ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரிடம் விசாரணை நடத்திய நிலையில், தற்போது மன்னனை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், முஸ்தபாவிடம் பேரம் பேசப்பட்டதாகக் கூறப்படும் தொலைபேசி உரையாடல்கள், சம்பந்தப்பட்ட நபர்களின் தொடர்புகள் மற்றும் இந்த விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து முஸ்தபாவின் உதவியாளர் கனியிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் நெருங்கிய ஆதரவாளராக வலம் வந்த மன்னன், 2006 முதல் 2011 வரை மதுரை துணை மேயராக பதவி வகித்து வந்தார்.

மு.க.அழகிரியுடன் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மன்னன், கடந்த பிப்ரவரி மாதம் அதிமுகவில் இணைந்தார்.
கழக கொள்கைப் பரப்புத் துணைச் செயலாளரும், மதுரை முன்னாள் துணை மேயருமான திரு. P.M. மன்னன் அவர்களை பொய் வழக்கில் கைது செய்துள்ள தவெக அரசின் ஏவல்துறைக்கு எனது கடும் கண்டனம். குதிரை பேரம் நடத்தி, எங்கள் கூட்டணியில் உள்ள அமமுக சட்டமன்ற உறுப்பினரை கடத்தி கையெழுத்து வாங்கி ஆட்சிக்கு வருவதற்கு முன்பே அத்தனை தில்லுமுல்லு வேலைகளையும் செய்த கட்சி தான் தவெக. ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு, அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வலைவீசி, “தலைமைச் செயலகமா? பனையூரின் கிளை அலுவலகமா?” என்று மக்களே அருவருக்கும் வகையில், “கீழ்மாடியில் ராஜினாமா; மேல்மாடியில் இணைப்பு விழா” என்று நாடு காணாத கேவலத்தை அரங்கேறிய ஒரே கட்சி தவெக தான். இந்த உண்மைகள் குறித்தெல்லாம் பேச வக்கில்லாத இந்த அரசு, மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா மூலம் ஒரு கட்டுக்கதையை புனைந்து, கழக நிர்வாகி திரு. மன்னன் அவர்களை கைது செய்து புதிய நாடகத்தை நடத்துவது வெட்கக்கேடானது. முதல்வரை அணுக முடியாமல், பல Powercenter-களுக்கு நடுவே சிக்கிக்கொண்டு, தவெக ஆட்சி மீது ஆளுங்கட்சி MLA-க்கள் பலரே அதிருப்தியில் இருப்பதாக செய்திகள் வந்துகொண்டு இருக்கின்றன. சொந்த கட்சி MLA-க்களை சமாதானப் படுத்த வழி தெரியாமல், இப்படி ஒரு கதையை இந்த அரசு புனைந்து இருக்கிறதோ? என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. பாதிக்கப்பட்டவன் மீதே பழியை சுமத்தி குற்றவாளி பட்டம் கட்டும் பழைய தமிழ் சினிமா பார்முலா-வை அஇஅதிமுக மீது திணிக்கப் பார்க்கும் இந்த சினிமா ரீல்ஸ் அரசுக்கு, அதே கதையின் இறுதியில் எல்லா சாயமும் வெளுத்துப் போய் நிற்கப்போவது தாங்கள்தான் என்பது நினைவில் இருக்கட்டும்! உடனடியாக திரு. மன்னன் அவர்களை விடுதலை செய்யவேண்டும் எனவும், இதுபோன்ற தரம்தாழ்ந்த அரசியல் சித்து விளையாட்டுகளை இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் இந்த பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 6, 2026
மன்னனின் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மன்னன் பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.