இறந்தது போல் நடித்த முன்னாள் விமான படை வீரர் - தீயிடும் முன் சொன்ன வினோத காரணம்
முன்னாள் விமான படை வீரர் இறந்தது போல் நாடகமாடி, தீயிடும் முன் எழுந்து காரணத்தை சொல்லியுள்ளார்.
இறந்தது போல் நாடகம்
பீகார் மாநிலம் கயா மாவட்டத்தின் கொன்சி கிராமத்தைச் சேர்ந்தவர் 72 வயதான மோகன் லால்.
முன்னாள் இந்திய விமான படை வீரரான இவரின் மனைவி, கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார். இவருக்கு 2 மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளது.
இந்நிலையில், இவர் தனது வீட்டில் இறந்து கிடப்பது போல் நாடகமாடியுள்ளார்.
இதனை கண்ட கிராம மக்கள் அவர் உண்மையிலே இறந்து விட்டதாக கருதி, அவருக்கு மாலை மரியாதை செய்து தகன மேடைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு தீயிடும் முன்னர் அவர் உயிரோடு எழுந்து, அங்கு கூடியிருந்த மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளார்.
என்ன காரணம்?
இது தொடர்பாக பேசிய மோகன் லால், "நான் என் வாழ்க்கையை நாட்டுக்காகச் சேவை செய்தேன். இந்த ஊரில் உள்ள தகன மேடையை எனது சொந்த செலவில் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் மேம்படுத்திக் கொடுத்தேன்.
ஆனால் இப்போது நான் இறந்து விட்டால் உண்மையில் யார் வருவார்கள், யாருக்கு என் மேல் அன்பு உள்ளது என்று பார்க்க விரும்பினேன் அதற்காகவே இறந்தது போல் நடித்தேன்" என இறுதி சடங்கிற்கு வந்தவர்களிடம் கூறியுள்ளார்.
மேலும், அங்கு வந்த அனைவருக்கும் அவர் விருந்து வைத்துள்ளார்.அவரின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |