கிரிக்கெட் விளையாடியதற்கே வருந்துகிறேன் - முன்னாள் இந்திய அணித்தலைவர் வேதனை
கிரிக்கெட் விளையாடியதற்கே வருந்துவதாக முன்னாள் இந்திய அணித்தலைவர் முகமது அசாருதீன் வேதனை தெரிவித்துள்ளார்.
முகமது அசாருதீன்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவராக செயல்பட்டவர் முகமது அசாருதீன். இவரது தலைமையின் கீழான இந்திய அணி 1991 ஆசிய கோப்பையை வென்றது.
300 ஒரு நாள் போட்டிகளில் முதல் வீரர், அறிமுகமான முதல் 3 போட்டிகளிலும் சதம் அடித்த ஒரே வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
2000 ஆம் ஆண்டில் Match Fixing இல் ஈடுபட்டதாக கூறி, முகமது அசாருதீனுக்கு ஐசிசி வாழ்நாள் தடை விதித்தது. இதன் பின்னர், 2012 ஆம் ஆண்டு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததில் இந்த தடை நீக்கப்பட்டது.
இதனையடுத்து, 2019 முதல் 2022 வரை, அசாருதீன் ஹைதராபாத் கிரிக்கெட் சங்க(HCA) தலைவராக செயல்பட்டார்.
மைதானத்தில் பெயர் நீக்கம்
ஹைதராபாத் கிரிக்கெட் சங்க நிர்வாகத்தின் கீழ் வரும், ஹைதராபாத்தின் உப்பல் பகுதியில் ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் உள்ள ஸ்டாண்டுக்கு விவிஎஸ் லஷ்மண் ஸ்டாண்ட் என்று பெயரிடப்பட்டு இருந்தது.
அசாருதீன் தலைமையிலான நிர்வாகக்குழு, இதனை ‘முகமது அசாருதீன் ஸ்டாண்ட்’ என பெயர் மாற்றம் செய்தது. இதனை எதிர்த்து, லார்ட்ஸ் கிரிக்கெட் கிளப் என்ற அமைப்பு, ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத்தில் முறையிட்டது.
இதனை விசாரித்த நீதிபதியும், குறைகேட்பு அதிகாரியுமான வி.ஈஸ்வரய்யா முகமது அசாருதீன் பெயரை நீக்க உத்தரவிட்டுள்ளார்.
அவரது உத்தரவில், "ஹைதராபாத் கிரிக்கெட் சங்க பொதுக் குழுவில் முடிவு எடுக்கப்படாமல் தன்னிச்சையாக, சுயநலமாக அசாருதீன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. இது சட்டவிரோதமானது, மீண்டும் விவிஎஸ் லஷ்மண் ஸ்டாண்ட் என்றே அழைக்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
அசாருதீன் வேதனை
இது குறித்து பேசியுள்ள அசாருதீன், "இந்த முடிவு என்னை தனிப்பட்ட முறையில் காயப்படுத்துகிறது. இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க நான் உறுதியாக இருக்கிறேன்.
மேலும் பிசிசிஐ இதில் தலையிட்டு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் . ஏற்கனவே பாஸ்கள் வழங்குவதில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் சங்கத்துடன் தகராறு செய்தது. இது ஒரு மோசமான நிர்வாகத்தை காட்டுகிறது.
இந்த அமைப்பிற்குள் உள்ள ஊழலை நான் வெளிப்படுத்தியதால், என்னை குறி வைக்கின்றனர். நான் HCA தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படவில்லை.
நான் 10 ஆண்டுகள் அணித்தலைவராக இருந்துள்ளேன். இப்படி நடத்துவது மோசமானது. கிரிக்கெட் விளையாடியதற்காக வருந்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |